
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் அடித்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன் தேவை. அதே சமயம் இங்கிலாந்து வெற்றிக்கு 6 விக்கெட் தேவை என்ற பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
ரிஷப் பண்ட் - கே.எல்.ராகுல் பேட்டிங்கை தொடங்கினர். ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரிஷப் பண்ட் 9 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார். நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 39 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து நிதிஷ் ரெட்டி களமிறங்கினார்.
இங்கிலாந்து பந்துவீச்சை ஒரளவு தாக்குப்பிடித்து விளையாடிய இந்த ஜோடி 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. நிதிஷ் ரெட்டி 13 ரன்களில் உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் அவுட்டானார். தற்போது பும்ரா-ஜடேஜா ஜோடி சேர்ந்து அணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த இன்னிங்சின் 35வது ஓவரை பிரைடன் கார்ஸ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில், ஜடேஜா 2 ரன்கள் அடித்தார். அதில் முதல் ரன் எடுக்க ஓடியபோது ஜடேஜா- பிரைடன் கார்ஸ் ஒருவருக்கொருவர் தெரியாமல் மோதி கொண்டனர். அப்போது பிரைடன் கார்ஸ் வேண்டுமென்றே ஜடேஜாவின் கழுத்தை பிடித்து இழுப்பதுபோல் தெரிந்தது. இருப்பினும் ஜடேஜா 2-வது ரன்னையும் ஓடி எடுத்துவிட்டார்.
இதில் கோபமடைந்த ஜடேஜா ரன் ஓடி முடித்த பிறகு கார்ஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் உள்ளே புகுந்து இருவரையும் சமாதானம் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.