
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் எதிரணியின் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்வதற்கு முன்பு விக்கெட் கீப்பர் மற்றும் வீரர்கள் 'பாங்கரா' நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேட்ஸ்மேன் பந்தை அடித்து விட்டு சிங்கிள் ரன் எடுக்க ஓடினார். பந்தை எடுத்த பீல்டர் பவுலரை நோக்கி வீசினார். ஆனால் பவுலர் அதனை பிடிக்காமல் தவறவிட்டார். இதனால் பேட்ஸ்மேன்கள் மற்றொரு ரன் எடுக்க முயற்சித்தனர். அதற்குள் மற்றொரு பீல்டர் பந்தை எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். ஆனால் விக்கெட் கீப்பர் முனையிலிருந்த பேட்ஸ்மேன் வேகமாக ஓடி வர எதிர்முனை பேட்ஸ்மேன் கிரீசுக்குள் சென்று விட்டார்.
இதனால் ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரன் அவுட் செய்வதற்கு முன்பு விக்கெட் கீப்பர் பஞ்சாப் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனமான 'பாங்கரா' ஆடினார். அதனை கண்ட சக வீரர்களும் கீப்பருடன் சேர்ந்து நடனமாடினர். அதன் பின்பே விக்கெட் கீப்பர் ரன் அவுட் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.