ரத்தினகிரி கோயிலில் 4ம் நாள் கந்த சஷ்டி விழா நவரத்தின அங்கி அணிந்து பாலமுருகன் அருள்பாலிப்பு

1 week ago 4

*பக்தி முழக்கத்துடன் திரளானோர் தரிசனம்

ஆற்காடு : ரத்தினகிரி கோயிலில் நடந்த 4ம் நாள் கந்த சஷ்டி விழாவில்நவரத்தின அங்கி அணிவித்து சுவாமி பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில்
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 7ம் படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி தொடங்கியது. நேற்று 4ம் நாள் விழா முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் நடந்தது. பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார்.

கந்த சஷ்டி 4ம் நாள் நவரத்தின அங்கி அணிந்து வெள்ளி வேல் மற்றும் சேவல் கொடியுடன் வள்ளி தெய்வானை சமேதராக சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் மீது அமர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ள கந்த சஷ்டி விழாவில் தினமும் வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வரும் 7 ம் தேதி மாலை சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதேபோல் வாலாஜா அணைக்கட்டு ரோடு சுந்தர விநாயகர் கோயிலில் கந்த சஷ்டியின் 4ம் நாள் உற்சவம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடந்து உற்சவர் சண்முகர் நாகவாகனத்தில் அமர்ந்து சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

The post ரத்தினகிரி கோயிலில் 4ம் நாள் கந்த சஷ்டி விழா நவரத்தின அங்கி அணிந்து பாலமுருகன் அருள்பாலிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article