
நாக்பூர்,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் ஆடின. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 353 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழகம் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விதர்பா தரப்பில் ஆதித்ய தாக்ரே 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 128 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் அடித்து 297 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. யாஷ் ரத்தோட் 55 ரன்னுடனும், ஹர்ஷ் துபே 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் சாய்கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த விதர்பா 272 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழகம் வெற்றி பெற 401 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து 401 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி தனது 2வது இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் காரணமாக 198 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற விதர்பா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. தமிழகம் தரப்பில் 2வது இன்னிங்சில் அதிகபட்சமாக சோனு யாதவ் 57 ரன்னும், பிரதோஷ் ரஞ்சன் பால் 53 ரன்னும் எடுத்தனர். விதர்பா அணி அரையிறுதி ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.