
நாக்பூர்,
90-வது ரஞ்சி கோப்பையை வெல்லப்போது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் விதர்பா - கேரளா அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கேரளா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணியின் தொடக்க வீரர்களாக பார்த் ரேகாடே மற்றும் துருவ் ஷோரே ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் பார்த் ரேகாடே ரன் எடுக்காமலும், துருவ் ஷோரே 16 ரன்னிலும், அடுத்து வந்த தர்ஷன் நல்கண்டே 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து டேனிஷ் மாலேவார் மற்றும் கருண் நாயர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
இந்த இணையை பிரிக்க முடியாமல் கேரள அணியினர் திணறினர். இதன் காரணமாக டேனிஷ் மாலேவார் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் கருண் நாயர் அரைசதம் அடித்த நிலையில் 86 ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியில் முதல் நாள் முடிவில் விதர்பா அணி தனது முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.
விதர்பா தரப்பில் டேனிஷ் மாலேவார் 138 ரன்களுடனும், யாஷ் தாக்கூர் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கேரளா தரப்பில் நிதிஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.