![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38891212-5-mumbai-ranji.webp)
கொல்கத்தா,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை - அரியானா அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மும்பை அணி 315 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக தனுஷ் கோட்யான் 97 ரன்னும், ஷாம்ஸ் முலானி 91 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய அரியானா அணி 301 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அரியானா தரப்பில் அதிகபட்சமாக அன்கித் குமார் 136 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 14 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 339 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரகானே 108 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய அரியானா அணி 201 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் காரணமாக 152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. அரியானா தரப்பில் அதிகபட்சமாக லக்சயா தலால் 64 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ராய்ஸ்டன் டியாஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.