ஜாம்ஷெட்பூர்,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். இதன் 7-வது மற்றும் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் உடன் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் தனது முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷரன்தீப் சிங் 52 ரன்கள் அடித்தார். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 27.5 ஓவர்களில் 106 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முகமது அலி 37 ரன்கள் அடித்தார். ஜார்கண்ட் தரப்பில் உத்கர்ஷ் சிங் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜார்கண்ட் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 154 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
ஜார்கண்ட் தரப்பில் அதிகபட்சமாக உத்கர்ஷ் சிங் மற்றும் ஆதித்யா சந்ரேஷ் சிங் ஆகியோர் தலா 35 ரன்கள் அடித்தனர். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளும், அஜித் ராம் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து தமிழகம் வெற்றி பெற 234 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி ஜார்கண்டின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நேற்றைய 2-வது நாள் முடிவில் தமிழக அணி 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்திருந்தது. விஜய் சங்கர் 33 ரன்களுடனும், அஜித் ராம் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் மேற்கொண்டு 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தமிழகம் தனது 2வது இன்னிங்சில் 189 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 44 ரன் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அசத்தல் வெற்றி பெற்றது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக முகமது அலி 44 ரன் எடுத்தார். ஜார்கண்ட் தரப்பில் மனிஷி 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டாலும் தமிழக அணி புள்ளிபட்டியலில் (25 புள்ளி) முதல் இடத்தில் உள்ளது.