மும்பை,
உதித் நாராயண் என்பவர் பிரபல பாடகர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் இவர் ரட்சகன் படத்தில் 'சோனியா சோனியா', மிஸ்டர் ரோமியோ படத்தில் 'ரோமியோ ஆட்டம் போட்டால்' உள்ளிட்ட பல பாடங்களை பாடி தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக உள்ளார்.
பாடல்கள் பாடுவது மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளில் இசை கச்சேரியும் நடத்தி வருகிறார். அந்தவகையில், அண்மையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார். அந்த இசைக்கச்சேரியில் அவர் பாடிக்கொண்டிருக்கும்போது அவரிடம் செல்பி எடுக்க வந்த பெண் உதித்தின் கன்னத்தில் முத்தமிட்டார்.
அப்போது உதித் நாராயணன் அந்தப்பெண்ணின் உதட்டில் முத்தமிடும்படியான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரும் உதித் நாராயணை கண்டித்து, தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், ரசிகையை உதட்டில் முத்தமிட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை எதுவும் பேசாமல் இருந்த உதித் நாராயண் தற்போது மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'ரசிகையை முத்தமிட்டது ஒரு தன்னிச்சையான நிகழ்வு. நான் கிட்டத்தட்ட 46 வருடங்களாக பாலிவுட் துறையில் இருந்து வருகிறேன். அவர்கள் என் மீது அன்பை பொழியும்போது, நான் என்னுடைய கைகளை மடக்கி வைத்துக்கொள்வேன். மேடையில் இருக்கும்போது நான் அவர்களை கைகூப்பி வணங்குவேன்' என்றார்.