
மவுண்ட் மவுங்கானுய்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தானை ஒயிட் வாஷ் ஆக்கியது.
இதன் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா பாதுகாப்பை மீறி ரசிகர்களை தாக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் பாதுகாவலர்கள் அவரை தடுத்ததுடன், ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த பரபரப்பு சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "மைதானத்தில் இருந்த வெளிநாட்டு ரசிகர்கள் எங்களது கிரிக்கெட் வீரர்களை நோக்கி தகாத வார்த்தைகளை கூறியுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தபோது, கிரிக்கெட் வீரர் குஷ்தில் ஷா குறுக்கிட்டு, ரசிகர்களை நோக்கி அதனை தவிர்க்குமாறு வலியுறுத்தினார். ஆனால் ரசிகர்கள் மேலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது" என்று கூறியுள்ளது.