ரசாயனமில்லை! செயற்கை நிறங்களில்லை! முழுக்க முழுக்க இயற்கையானது!

4 hours ago 1

நன்றி குங்குமம் தோழி

தினம் ஒரு புதுச் சுவையை தேடிச் செல்லும் இன்றைய தலைமுறையினர் ரசாயனமில்லாத இயற்கை இனிப்புகளுக்கு மெதுவாக திரும்பி வருகிறார்கள். குழந்தைகளுக்காகவும், ஆரோக்கியத்தை கவனிக்கும் பெரியவர்களுக்காகவும் இயற்கை முறையில் பலர் கேக், குக்கீஸ்களை தயாரிக்க துவங்கியுள்ளனர். அந்த வரிசையில் தன்னையும் இணைத்துள்ளார் சென்னை அமைந்தகரையில் வசிக்கும் அசிரா பேகம்.

வீட்டிலிருந்தே இயற்கை முறையில் ரசாயனமின்றி இனிப்புகளைத் தயாரித்து, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இன்று பலர் தங்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷங்களுக்கு இவரிடம் கேக், சாக்லெட்டுகள் மற்றும் குக்கீஸ்களை ஆர்டர் செய்து வருகிறார்கள். இயற்ைக இனிப்பு உணவில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் அசிரா பேகம், தன் வெற்றிப் பயணத்தை பகிர்ந்தார்.

“சென்னைதான் எனக்கு சொந்த ஊரு. இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே கேக் மற்றும் குக்கீஸ் தயாரிப்பதில் ஆர்வம் அதிகம். அதனால் யூடியூப் சேனல்கள், சமையல் புத்தகங்களை படித்து கேக் தயாரிக்க கற்றுக்கொண்டேன். அமைந்தகரையில் உள்ள எனது வீட்டில் ஆரம்பத்தில் சாதாரண டீ கேக்குகளைத்தான் செய்து வந்தேன். அதன் பின்னர், வெனிலா, பட்டர் ஸ்காட்ச், ஸ்பாஞ்ச், சாக்லேட், பானா வால்நட் கேக், ப்ளம் கேக், ஃப்ரெஷ் கிரீம், பழங்கள் என பல ஃப்ளேவர்களில் கேக் செய்யத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, பார்ட்டிகளுக்கு எல்லாம் ஆர்டர்கள் வரத் தொடங்கியது. அதன் பின்னர், முழு நேர வேலையாக கேக் செய்வதே என்னுடைய தொழிலாக மாறியது’’ என்று கூறும் அசிரா, ஒரு கேக்கினை சரியான பதத்தில் தயாரிக்க பல டிரையல் எடுக்க வேண்டும் என்கிறார்.

‘‘கேக் செய்வது சுலபம். ஆனால், அதில் சேர்க்கப்படும் பொருட்கள் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எந்த கேக்கினையும் சுவையாக செய்யலாம். குறிப்பாக பிளம் கேக் செய்ய ஒரு மாத காலமாகும். அதற்கான ஆரம்பமே ட்ரை ஃப்ரூட்ஸ். பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், தேயிலை இலை, சில்லி இஞ்சி, ப்ளம்ஸ், சிட்ரன்கள் தான். இவற்றை பழச்சாறில் ஊற வைத்து பதப்படுத்த வேண்டும். அந்தக் கலவைதான் கேக்குக்குள் உள்ள உயிரணு மாதிரி. சுவைக்கும் மணத்திற்கும் காரணமே அதுதான்.

அதன் பிறகுதான் கேக் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவு. எனது கேக் தயாரிப்புகள் எதிலும் பேக்கிங் சோடா பயன்படுத்துவதே கிடையாது. பொதுவாக, கேக்கின் மிருதுத் தன்மைக்காக பேக்கிங் சோடா சேர்ப்பார்கள். அது உடலுக்கு கெடுதல் என்பதால், அதனை சேர்க்காமல், அதற்கு இணையான இயற்கையான மூலப்பொருட்கள் சேர்த்து கேக்குகளை தயாரிக்கிறேன். இதனை ஒரு வாரம் வரை நார்மல் சீதோஷ்ணநிலையில் வைத்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது, சுவையாக இருக்கும்.

பேக்கிங் சோடா பயன்படுத்தாததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. இது தவிர, சிறுதானியங்களை பயன்படுத்தியும் கேக்குகள் தயாரிக்கிறேன். மல்டி மில்லெட்ஸ் மற்றும் ராகி கேக்குகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுபோன்று நீரிழிவு நோயாளிகளுக்காக சர்க்கரை சேர்க்காத கேக்குகளும் தயார் செய்கிறேன். ப்ரவுன் சுகர், நாட்டுச் சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தியும் வித்தியாசமான சுவைகளில் கேக்குகள் தயாரிக்கிறேன். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது’’ என்றவர் ஃப்ரெஷ் கிரீம்களை அவரே தயாரித்து பயன்படுத்தி வருகிறார்.

‘‘ ஃப்ரெஷ் கிரீம் கேக்குகளை ஃப்ரிட்ஜில்தான் வைக்க முடியும். பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் கேக்குகளில் அவை கெடாமல் இருக்க பிரிசர்வேடிவ்களை பயன்படுத்துவார்கள். நான் அதனைப் பதப்படுத்துவது இல்லை. பழங்கள் கொண்டு செய்யப்படும் கேக்குகளுக்கு அன்றே பழங்களை வாங்கி அதை பயன்படுத்துகிறேன். இதனால், கேக்குகள் சுவையாக இருக்கும். நான் புதுமையாக டிரை செய்த கேக் த்ரீலேயர் கேக். அதில் ஒவ்வொரு லேயரும் ஒரு நிறம் மற்றும் ஃப்ளேவர்களில் வரும். உதாரணமாக, ஒரு லேயர் பழங்களின் சுவையில் இருந்தால், அடுத்த லேயர் நட்ஸ் நிறைந்திருக்கும், மற்றொரு லேயர் சாக்லேட் சுவையில் இருக்கும்.

இப்படி ஒரே கேக்கில் மூன்று விதமான சுவை இருக்கும். இந்த கேக்குகளை தயாரிக்க 2 முதல் 3 நாட்களாகும். மேலும், நான் ரசாயனம் கலப்பதில்லை என்பதால் கூடுதல் நேரமாகிறது. அதுபோல், குழந்தைகளின் பிறந்தநாளுக்கு தயார் செய்யும் கேக்குகளில் செயற்கை நிறங்களை நான் சேர்ப்பதில்லை. இயற்கை நிறங்களையே பயன்படுத்துகிறேன். அளவான இனிப்பு மற்றும் இயற்கை முறையில் தயாரிப்பதால், பலர் தங்களின் வீட்டு விசேஷத்திற்கு விரும்பி ஆர்டர் செய்கிறார்கள்.

இன்ஸ்டா மற்றும் ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெற்றுச் செய்து தருகிறேன். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத ருசியும் இருப்பதால் ஏராளமானோர் தங்களின் வீட்டு விசேஷத்திற்கு தேவையான கேக்குகளை எங்களிடம் இன்ஸ்டாகிராம், மொபைல் போன் மூலம் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்’’ என்றவர், மேலும் பல சுவைகளில் புதுவித கேக்குகளை தயாரிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்.

தொகுப்பு :மோகனப்பிரியா சுபாஷ்

The post ரசாயனமில்லை! செயற்கை நிறங்களில்லை! முழுக்க முழுக்க இயற்கையானது! appeared first on Dinakaran.

Read Entire Article