ரசாயனமில்லா கரும்பு சாகுபடி… மதிப்புக்கூட்டி நேரடி விற்பனை…

6 months ago 25

இயற்கை முறை விவசாயத்தின் பயனும் பலனும் நாமெல்லாம் அறிந்ததே. சில இடர்கள் வந்தாலும் கூட விடாப்பிடியாக இயற்கை விவசாயத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வரிசையில் அசத்தலான முறையில் இயற்கை விவசாயம் செய்து வருபவர்தான் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ப.கண்ணன். 25 வருடங்களுக்கும் மேலாக அரபு நாடுகளில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணி செய்தவர், விவசாயம் சார்ந்த எந்த அனுபவமும் இல்லாதவர் எப்படி இயற்கை விவசாயத்திற்குள் நுழைந்தார் என்பதை தெரிந்துகொள்ள அவரது விவசாய வயலுக்குச் சென்றிருந்தோம். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் கூட்டு சாலைக்கு அருகில் உள்ள புன்னைப்பாக்கத்தில் இருக்கிறது இவரது வயல். இதனால் இந்த வயலுக்கு புன்னை வனம் என பெயரும் இட்டிருக்கிறார். புன்னை வனத்தின் கரும்பு வயலில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கண்ணன் நம்மை மகிழ்வோடு வரவேற்று பேசினார்.

“25 வருடங்கள் வெளிநாட்டில் வேலை. ஒரு கட்டத்தில் அயல் நாட்டு வேலை சலித்துப்போனதால் ஊருக்கே திரும்பி விடலாம் என்ற எண்ணம் வந்தது. ஊருக்குப் போய் என்ன செய்வது என யோசிக்கும்போதுதான் விவசாயம் செய்யலாம் என தோன்றியது. அதுவும் மண்ணுக்கும் மக்களுக்கும் நோய் ஏற்படுத்தாத இயற்கை வழி விவசாயம்தான் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படி 2018ல் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே 4 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினேன். அந்த வருடமே பாரம்பரிய அரிசியை இயற்கை முறையில் விளைவித்தேன். முதல் வருடம் ஒரு ஏக்கருக்கு 11 மூட்டை நெல்தான் கிடைத்தது. அது குறைவானதுதான் என்றாலும் இயற்கை முறை விவசாயத்தில் இது முதல் முயற்சி அல்லவா! அது எனக்கு மகிழ்ச்சியையே தந்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வேறுவேறு பாரம் பரிய ரக நெல் பயிரிட்டேன். இந்த வருடம் நெல் பயிரிட்டு அறுவடை செய்த நிலையில்
ஒன்றரை ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளேன். கரும்பும் கூட இயற்கை முறை சாகுபடிதான். எந்த விதமான பூச்சி விரட்டியோ பூச்சிக்கொல்லியோ பயன்படுத்தாமல் கரும்பு விளைவித்திருக்கிறேன். ஒன்றரை ஏக்கரில் 15 அடிக்கு ஒரு இடத்தில் குழி அமைத்து அதில் 6 விதைக்கரணைகளை வைத்து நல்ல இடைவெளி விட்டு கரும்பு சாகுபடி செய்கிறேன்.

முதலில் நிலத்தை நன்றாக உழவு ஓட்டிய பிறகு குப்பை மண்ணைக் கொட்டி அதன்மீது கரும்பு விவசாயம் செய்கிறேன். இந்த ஒன்றரை ஏக்கரில் 15 அடி இடைவெளியில் 330 குழிகள் அமைத்திருக்கிறேன். ஒவ்வொரு குழியிலும் 6 முதல் 7 விதைக்கரணைகள் வைத்து சாகுபடி செய்கிறேன். அப்படிப் பார்த்தால் 2000 கரணைகள் வீதம் தேவைப்படுகிறது. எனது வயலில் விளைகிற விளைபொருட்கள் வியாபாரத்திற்கோ அல்லது லாபகர நோக்கத்திற்கோ நான் உற்பத்தி செய்யப்படுவது கிடையாது. இயற்கை முறையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக இருப்பதால் மகசூலைப் பற்றியும் வருமானத்தைப் பற்றியும் கவலைப்
படுவது கிடையாது.

கரும்பு விவசாயத்தைப் பொறுத்தவரை நான் அதிகபட்சமாக நிலத்தடி நீரை மட்டும்தான் செலவழிக்கிறேன். அதாவது மழை பெய்யும்போது அதனை சரியான முறையில் நிலத்தடியில் சேகரித்து கரும்புகள் வெப்பத்தால் பாதிப்பு அடையாதவாறு பாதுகாத்து வளர்க்கிறேன். அதுபோக, கரும்புக்கு அதிகப்படியான நீர் தேவைப்படும் சமயத்தில் மட்டும் தண்ணீர் கொடுக்கிறேன். இந்த வருடம் ஒன்றரை ஏக்கரில் சராசரி 20 டன் வரை மகசூல் எடுக்கலாம். அது குறைவானதுதான் என்றாலும் இயற்கை முறை கரும்பு உற்பத்தியில் இது மகிழ்ச்சியானதுதான். தாத்தா காலத்தில் விவசாயம் செய்தது. அதன்பிறகு தற்போது நான்தான் விவசாயம் செய்கிறேன். அதுவும் கடந்த 6 வருடங்களாகத்தான். இயற்கை முறை விவசாயத்தில் என்னவெல்லாம் என்னால் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’’ என மகிழ்வுடன் பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
ப.கண்ணன்: 99405 13239.

வெப்பாத்தி குழிகள்

ஒன்றரை ஏக்கர் கரும்பு வயலில் 2 க்கு 2 என்ற நீள அகலத்தில் 2.1/2 அடி ஆழத்தில் 80 வெப்பாத்திக் குழிகள் இருக்கின்றன. இந்த வெப்பாத்திக் குழிகளை விவசாய நிலத்தில் வெட்டி வைப்பதால் நிலத்தடியில் இருக்கிற வெப்பம் குழிகளின் வழியே வெளியேறி நல்ல சீதோஷ்ண நிலை கிடைக்கிறது. கரும்புக்குத் தேவையான நிலத்தடி நீர் சரிவிகிதமாக கிடைக்கிறது. இதனால் கரும்புக்கு நாம் பாய்ச்ச வேண்டிய நீரின் அளவு குறைகிறது.

தனது தோட்டத்தில் விளைகிற கரும்புகளை இந்த விவசாயி வெளி இடங்களுக்கு விற்பது கிடையாது. மாறாக, அவரே நாட்டுச் சர்க்கரை தயாரித்து அவரது பொருளை மதிப்புக்கூட்டி விற்கிறார். அதுபோக கரும்பு ஜூஸ் கடை வைத்திருப்பதால் இவரது வயலில் விளைகிற கரும்புகள் பெரும்பாலும் ஜூஸ் கடைக்கே செல்கின்றன. இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது.

The post ரசாயனமில்லா கரும்பு சாகுபடி… மதிப்புக்கூட்டி நேரடி விற்பனை… appeared first on Dinakaran.

Read Entire Article