சென்னை: “மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்ற அந்த வரலாற்றை மீண்டும் நிலைநாட்டுகிற வகையில், ‘நான் முதல்வன்’ திட்டம் இதே உறுதியோடு செயல்படும். தமிழகத்திலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை பேருக்கும், வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்வதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நேற்று வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நேரத்தில், சில கருத்துக்களை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். மத்திய அரசுப்பணிகளைப் பொறுத்தவரை, 2016-ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 மாணவர்கள் வெற்றி பெற்று வந்துள்ளார்கள். ஆனால், 2016-க்கு பிறகு அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. குறிப்பாக, 2021-ல், மட்டும் 27 தமிழர்கள் மட்டுமே மத்திய அரசினுடைய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்கள்.