யுஜிசி புதிய நெறிமுறைகளை எதிர்ப்போம்; ஆளுநர் தனது எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: அமைச்சர் கோவி. செழியன் எச்சரிக்கை

1 week ago 2


சென்னை: யு.ஜி.சி.யின் புதிய நெறிமுறைகளை எதிர்த்து கடைசி வரை போராடுவோம். அதேநேரம் நெறிமுறைகளை தாண்டி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் முகமாக யுஜிசி வரைவு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில மாணவர்களுடைய கல்வி சார்ந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாகவே இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறது.

அதைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். ‘நாங்கள் சொன்னதை நீங்கள் செய்ய வேண்டும்’ என்று ஒரு சர்வாதிகாரத்தோடு பல்கலைக்கழகத்தின் மீது திணிக்கக் கூடிய கருத்தாகத்தான் யுஜிசியின் வரைவு இருக்கிறது. துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி தலையிடுகிறது. தொடர்ந்து கல்விப் பணி ஆற்றிக் கொண்டிருப்பவர்கள்தான் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும். கல்விப் பணி சாராதவர்களும் துணைவேந்தர் ஆகலாம் எனச் சொல்லியிருப்பது பல்கலைக் கழகங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். அதேபோல பட்டப் படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம் என்பது ஏற்புடையதல்ல. தொழிற்கல்வியில் இருந்து பொதுக் கல்விக்கு மாணவர்கள் மாறி படிக்கலாம் என்பதும் தவறானது.

ஒரே நேரத்தில் 2 இளங்கலை, 2 முதுகலை படிக்கலாம் என்பதும் சரியானதல்ல. இது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உயர்கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. யு.ஜி.சி. புதிய நெறிமுறைகளை தமிழ்நாடு போன்று கேரளா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளும் எதிர்த்துள்ளன. யு.ஜி.சி. புதிய நெறிமுறைகளை எதிர்த்து கடைசி வரை நாங்கள் போராடுவோம். யுசிசி குறித்து வருகிற 5.2.2025க்குள் கருத்து தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசுக்கு மெயில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். நெறிமுறைகளை தாண்டி ஆளுநர் கல்வித்துறையை மாற்ற நினைத்தால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். பச்சையப்பன் கல்லூரியை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post யுஜிசி புதிய நெறிமுறைகளை எதிர்ப்போம்; ஆளுநர் தனது எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: அமைச்சர் கோவி. செழியன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article