யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி

4 hours ago 1

சென்னை,

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம், மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2019 ஜனவரி 28 அன்று ஆணையிட்டது. அந்த ஆணையை தமிழக அரசு செயல்படுத்தாத நிலையில், கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 21 அன்று உத்தரவிட்டது. ஆனால், 4 மாதங்களான பின்னரும் அந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாத நிலையில், மீண்டும் கடந்த அக் 18 அன்று முந்தைய உத்தரவை செயல்படுத்த தமிழக அரசை கேட்டுக்கொண்டது. ஆனாலும், தமிழக அரசு தனது பிடிவாதத்தில் இருந்து பின்வாங்காமல் அபத்தமான காரணத்தை கூறி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25,000 ஊதியம் மட்டும் தான் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி ஆணையரகம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி ஆணை வெளியிட்டது.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக 1996 ஆண்டு முதல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான முறையான ஊதியத்தை வழங்குவதில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை. தமிழகத்தில் சுமார் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7300 க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றார்கள். தற்போது தான் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பூதியமே வழங்கப்படுகிறது. இந்த மதிப்பூதியமும் ஆண்டின் மே தவிர்த்த மற்ற 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் நிலைக்கு சென்றுவிட்ட நிலையில், ரூ.25 ஆயிரத்தைக் கொண்டு ஒரு கவுரவ விரிவுரையாளர் வாழ்க்கையை கடத்துவது என்பது மிகக் கடினம்.

இந்நிலையில், யுஜிசி பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும், படிப்படியாக கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியும், தற்போது ஒருவார காலமாக அந்தந்த கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தை கவுரவ விரிவுரையாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணாமல், அவர்களுக்கு கல்லூரி முதல்வர்கள் மூலம் நெருக்கடி கொடுப்பதும், அவர்களுக்கு மெமோ கொடுப்பதுமான நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

ஆகவே, கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்யும் துரித நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கவுரவ விரிவுரையாளர்களின் ஜனநாயக போராட்டத்தை மதித்து அவர்களது போராட்ட நாட்களை பணியாற்றிய நாட்களாக கருதி எவ்வித சம்பளமும் பிடித்தம் செய்யாமல் முழுமையான ஊதியத்தை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article