
டெல்லி,
நாட்டின் மின்னணு பண பரிமாற்றத்திற்காக யு.பி.ஐ. என்ற ஒருங்கிணைந்த மின்னணு பரிமாற்ற சேவை நடைமுறையில் உள்ளது. இதை பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி வணக்கிற்கும், வர்த்தகத்திற்கு பண பரிமாற்றம் செய்யலாம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படுகிறது. இதனிடையே, கடந்த 26ம் தேதி நாடு முழுவதும் யு.பி.ஐ. சேவை முடங்கியது. இதனால் பயனாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், யு.பி.ஐ. டிஜிட்டல் பணபரிவர்த்தனை சேவை இன்று மீண்டும் முடங்கியுள்ளது. சில பயனாளர்கள் பணத்தை ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்வதில் சிக்கலை சந்தித்துள்ளனர். யு.பி.ஐ. பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இன்று இரவு 8 மணியளவில் ஒரேநேரத்தில் 449 புகார்கள் வந்துள்ளதாக டவுண்டிராக்கர் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
போன்பே, ஜிபே, கனரா வங்கி மூலம் ஆன்லைனில் பணபரிவர்த்தனை செய்ய முடியவில்லை என்று பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர். செல்போனில் போன்பே, பேடிஎம், ஜிபே ஆப் மூலமாக யு.பி.ஐ. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 26ம் தேதி யுபிஐ பணபரிவர்த்தனை சேவை முடங்கிய நிலையில் தற்போது 2வது முறையாக சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.