
திருப்பதி:
திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காலையில் பகவானை துயிலெழுப்பி, தோமால சேவை மற்றும் சஹஸ்ரநாமராச்சனை செய்யப்பட்டது. பின்னர், உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் வசந்த மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிறப்பு ஆஸ்தானம் நடைபெற்றது.
மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்னாபன திருமஞ்சன உற்சவம் நடந்தது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் ஊஞ்சல் சேவையைத் தொடர்ந்து கல்யாண வெங்கடேஸ்வரர், கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை தங்கத் தேரோட்டம் விமரிசையாக நடைபெற உள்ளது.
வசந்தோற்சவ விழா நாளை வரை நடைபெற உள்ளது. வசந்தோற்சவ நிகழ்வுகள் காரணமாக கோவிலில் நித்யகல்யாண உற்சவ சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.