சட்டப் பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (அதிமுக) பேசியதாவது: குடிசைமாற்று வாரியத்திலே அதிகமான வீடுகள் காலியாக உள்ளன. அவற்றை ஆய்வு செய்து ஏழை, எளியவர்களுக்கு அந்த வீடுகளைக் கொடுக்க வேண்டும். அமைச்சர் தா.மோ.அன்பரசன்: அதிமுக ஆட்சியில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, 2020ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 5 மாதங்களில் ரூ.5,333 கோடியே 60 லட்சம் மதிப்பில் 40,847 வீடுகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அவசர அவசரமாக வேலையைக் கொடுத்து விட்டார்கள்.
நகரங்களை விட்டு வெளியே இடங்களைத் தேர்வு செய்தது, யானை வழித்தடம் என பல காரணங்களால் 31 திட்டப் பகுதிகளிலே ஒப்பந்தப்புள்ளிகள் எல்லாம் போடப்பட்டும் வேலை நடத்த முடியாமல் இருந்தது. தற்போது மறு மதிப்பீடு செய்யப்பட்டு கிட்டத்தட்ட ரூ.700 கோடி டெண்டருக்கு பணத்தை கொடுத்து படிப்படியாக வீடுகள் கட்டி ெகாடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, எந்தவித அனுமதியும் இல்லாமல் 6,000 வீடுகளை எண்ணூர் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் கட்டியுள்ளனர். அந்த வீடுகளுக்கெல்லாம் அனுமதி வழங்கி, இப்போதுதான் குடியமர்த்துகிறோம். அந்த அளவிற்கு அதிமுக ஆட்சியில் பரிதாபகரமான நிலைமையே இருந்தது.
உடுமலை கே.ராதாகிருஷ்ணன்: 2024-25ம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள பேருந்து நிலைய பணிகள் குறித்து தெரிவிக்க வேண்டும். அமைச்சர் சேகர்பாபு: கடந்த 10 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகள் ஒட்டுமொத்தமாக 65. அதில் கைவிடப்பட்டவை 18. அப்படியென்றால், நீங்கள் இருந்தபொழுதே அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 30 % அறிவிப்புகளைக் கைவிட்டுவிட்டீர்கள். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு நாங்கள் அறிவித்திருக்கின்ற அறிவிப்புகள் 247. இந்த 247 அறிவிப்புகளும் ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் முழுமையாக நடைபெற்று இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக 80% பணிகளை நிறைவேற்றுகின்ற வகையில் முதல்வர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post யாருடைய ஆட்சிக்காலத்தில் அதிக வீடுகள் கட்டப்பட்டன: திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் appeared first on Dinakaran.