யாராவது தன்னை புகழணும் என்பதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 hours ago 2

‘‘மருத்துவமனை பிளாக் கட்டி லிப்ட் அமைக்காமலேயே 27 எல் சுருட்ட பிளான் போட்ட விவகாரத்தில் 5 பேர் மேல விஜிலென்ஸ் கேஸ் போட்டிருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா, ‘‘குயின்பேட்டை மாவட்டத்துல, வா என்று தொடங்கி ஜால முடியுற கவர்மெண்ட் மருத்துவமனை இயங்கி வருது.. இங்க புறநோயாளிகள் பிளாக் கட்டுறதுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நிறைவடைஞ்சது.. ஆனா, கட்டிடத்தை ஒப்படைக்குறபோது, லிப்ட் வசதி ஏற்படுத்தாம, பணி முடிஞ்சதாக ஒப்படைச்சிருக்காங்க..

இதற்கிடையிலத்தான் கவர்மெண்ட் ஆஸ்பிடல்ல, லிப்ட் அமைக்காம பணத்தை சுருட்டியதாக வெயிலூர் விஜிலென்ஸ்சுக்கு ரகசிய தகவல் கிடைச்சிருக்குது.. விஜிலென்ஸ் நடத்துன விசாரணையில, லிப்ட் வாங்குறதுக்கு 2018ம் ஆண்டு 20 எல் வரைக்குமான நிதியை ஒப்பந்ததாரருக்கு பொதுப்பணித்துறை வழங்கியிருக்குது.. அதோட, லிப்ட் அமைக்க 2வது கட்டமாக 6.81 எல்னு, 27 எல் வரைக்கும் லிப்ட் அமைக்காமல் நிதிய விடுத்து மோசடியில் ஈடுபட்டதாக விஜிலென்ஸ் காக்கிகள் விசாரணையில தெரியவந்துச்சு..

இந்த விவகாரத்துல பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரிவர பதில் சொல்லவில்லையாம்.. விஜிலென்ஸ் விசாரண தீவிரமாக இருந்ததால, லிப்ட் அமைக்குற பணியை வேகமாக முடிஞ்சு, மருத்துவ நிர்வாகத்திடம் ஒப்படைச்சிருக்காங்க.. இந்நிலையில், லிப்ட் அமைக்காம 27 எல் விடுவிச்சது தொடர்பாக மாஜி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்பட 5 பேர் மேல விஜிலென்ஸ் கேஸ் போட்டிருக்காங்க.. இந்த கேஸ் தான் பொதுப்பணித்துறையில ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சின்னமம்மி, தேனிக்காரரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே நூற்றாண்டு விழா என ஏமாற்று விழாவை இலைக்கட்சி தலைவர் நடத்தியதாக கட்சிக்காரங்களே குமுறுகிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவர் ஒரு சாணக்கியர்ன்னு அவரது அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க.. ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் எப்போதும் தன்னை யாராவது புகழ்ந்துக்கிட்டே இருக்கணுமுன்னு ரொம்பவே ஆசைப்படுவாராம்.. அதன்படி கட்சிக்காரர்களுக்கு பச்சை துண்டை அணிவித்து விவசாயிகள் என்ற பெயரில் பாராட்டு விழாவை நடத்தி குளிர் காய்ந்தாராம்..

அப்படியே சென்னையில் ஜானகியம்மாவுக்கு நூற்றாண்டு விழாவை நடத்தி மகிழ்ந்தாராம்.. அதுவும் சின்னமம்மிக்கு துரோகம் செஞ்சிட்டாரு, விசுவாசம் இல்லாதவருன்னு தேனிக்காரர் கூட்டம் அவரை குறை கூறிக்கிட்டே இருப்பதை அவரால் சகித்துக்கொள்ள முடியாமல் இருந்தாராம்.. இதற்காக ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கட்சியின் நிறுவனரை வச்சி பாராட்டை வாங்கிட்டாராம்.. அதுவும், ‘நேர்மையான பொதுவாழ்விலும், உழைப்பாலும், விசுவாசத்தாலும் தம்பி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்’ என பேச வச்சிருக்காரு.. இதைக்கேட்டதும் அவரது காதில் தேன் வந்து பாய்ந்தது போன்று இருந்திச்சாம்..

ஆனால் ஜானகியம்மாவுக்கு கட்சிக்காரர்களை வைத்து விழா எடுக்கலன்னு இலைக்கட்சி தொண்டர்கள் ரொம்பவே வருத்தத்தில் இருக்காங்களாம்.. ஜெ.-ஜா என கட்சி இரண்டாக உடைந்த நிலையில் கட்சியை ஜெ.விடம் ஒப்படைத்துவிட்டு சென்றாராம் ஜானகி.. அந்த காலக்கட்டத்தில் ஜா. அணியில் இருந்த மூத்த நிர்வாகிகள் விரல் விட்டு எண்ணும் வகையில்தான் இருக்கிறாங்க.. இலைக்கட்சி தலைவரின் ஊரில்கூட கட்சியின் ரெண்டு தலைவர்கள் மந்திரி சபையில் இருந்த மூத்த பெண் நிர்வாகி கூட இருக்காராம்..

அவர்களுக்கு இந்த விழாவில் ஒரு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியிருக்காங்க.. அதே நேரத்துல இந்த விழாவுக்காக கட்சிக்காரர்களுக்கு முறையான அழைப்புக்கூட விடுக்கலையாம்.. இதனால இலைக்கட்சி தலைவரோட சொந்த ஊர் நிர்வாகிகள் கூட விழாவுக்கு வரலையாம்.. எம்எல்ஏக்கள், மா.செ.க்கள் மட்டும் விழாவுக்கு வந்தால் போதுமா, அவர்கள்தான் கட்சியா என கேள்வி எழுப்பும் ரத்தத்தின் ரத்தங்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் சின்னமம்மியையும், தேனிக்காரரையும் வெறுப்பேற்றவும், தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே நூற்றாண்டு விழான்னு ஏமாற்று விழாவை நடத்தியதாக கட்சிக்காரங்களே சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குக்கர் கட்சியிலிருந்து இலைக்கட்சியில் ஐக்கியமானவர்கள் புது கோஷ்டியாக உருவாகிட்டு வர்றாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘லிங்க கடவுளின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் இலைக்கட்சிக்குள் மல்லுக்கட்டு நடப்பதுதான் இப்போ ஹாட் டாபிக்… குக்கர் கட்சியில் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏவானவர், சில மாதங்களுக்கு முன் சேலத்துக்காரரை சந்தித்து இலைக்கட்சியில் இணைந்தார். கடும் குடைச்சல் கொடுக்கும் அவரை கட்சியில் சேர்த்தது, இலைக்கட்சியின் மாவட்ட செயலாளருக்கு அப்போதே வயிற்றில் புளியை கரைத்தது.

எதிர்பார்த்தது போலவே, மாஜி எம்எல்ஏ தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாராம்.. ‘முன்னாள் எம்எல்ஏவாக இருந்த எனக்கு, கட்சி கூட்டங்களுக்கு முறையாக தகவல் தெரிவிப்பதில்லை’ என கட்சிக்காரர்கள் முன்னிலையிலேயே மாவட்ட செயலாளரை ஒரு பிடி பிடித்துள்ளார். இவர் தலைமையில் குக்கர் கட்சியில் இருந்து வந்து, இலைக்கட்சியில் ஐக்கியமானவர்கள் புது கோஷ்டியாக உருவாகியுள்ளனராம்.. ஏற்கனவே, மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தரப்பில் இருந்து நெருக்கடி உருவான நிலையில், இந்த குக்கர் குரூப் சவுண்டு வேற டார்ச்சராக இருக்கிறதே என மா.செ போற, வர்றவங்க கிட்டே எல்லாம் புலம்பி திரிகிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post யாராவது தன்னை புகழணும் என்பதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article