* குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகளிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதம்
களக்காடு : வனவிலங்குகளை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என களக்காட்டில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் யானைகள், பன்றிகள் அட்டகாசம் அதிகரிப்பால் ஒன்றுமே மிஞ்சவில்லை என குற்றம்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. துணை இயக்குநர் ரமேஷ்வரன் தலைமை வகித்தார். திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் முன்னிலை வகித்தார். வனவர் மதன்குமார் வரவேற்றார்.
இதனைதொடர்ந்து துணை இயக்குநர் ரமேஷ்வரன், வனசரகர் யோகேஸ்வரனிடம் மலையடிவாரத்தில் செயலிழந்து கிடக்கும் சோலார் மின் வேலிகளை கணக்கெடுப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படையார், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் முருகன் ஆகியோர் ‘‘நீங்கள் உங்கள் அலுவலர்கள் கூட்டத்தில் அவரிடம் இதுபற்றி பேசுங்கள், இது விவசாயிகள் கூட்டம், நாங்கள் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு, எங்கள் வேலைகளை விட்டு, விட்டு வந்துள்ளோம். விவசாயிகளிடம் குறைகளை பற்றி கேளுங்கள்’’ என்றனர்.
தொடர்ந்து அவர்கள் பேசுகையில் ‘‘யானைகள், பன்றிகள் நாளுக்குநாள் அட்டகாசம் அதிகரித்து விட்டது. ஒரே விவசாயிக்கு 3 ஆயிரம் வாழைகள் நாசமாகியுள்ளது. அவர் எப்படி குழந்தைகளை படிக்க வைப்பார். மகளுக்கு திருமணம் செய்து வைப்பார்?. அவருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. வனவிலங்குகளை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?. வனவிலங்குகளை கணக்கெடுக்க வனப்பகுதிக்குள் தானியங்கி கேமரா பொருத்தி உள்ளீர்கள்.
அதேபோல மலையடிவாரத்தில் கேமராக்கள் பொருத்தி யானைகள், பன்றிகள், கடமான் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். குறை தீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி ஒவ்வொரு கூட்டத்தில் போர்டு வைக்க வேண்டும்’’ என்றனர்.
தென்னிமலையைச் சேர்ந்த விவசாயி கந்தையா கூறுகையில் ‘‘எனது தோட்டத்தில் பன்றிகள், கடமான்கள், மயில்கள் அட்டகாசத்தால் விவசாய பயிர்கள் தொடர்ந்து நாசமாகி வருகிறது. 5 ஆண்டுகளாக நான் மனுக்கள் கொடுத்து வந்த போதும், இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. இனி தற்கொலை தான் செய்ய வேண்டும்” என்றார்.
மஞ்சுவிளை பகுதியைச் சேர்ந்த சில்கிஸ் சாமுவேல் என்பவர் பேசுகையில் ‘‘ஒவ்வொரு விவசாயியும், நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று அதனை வயலில் போட்டு விட்டு, இரவு, பகலாக வயலிலேயே காத்து கிடக்கிறார்கள். ஆனால் வனவிலங்குகள் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை’’ என்றார்.
இதைத்தொடர்ந்து மூங்கிலடி பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற விவசாயி பேசுகையில் ‘‘பொதுவாக குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனிமேல் இவ்வாறு நடத்தப்படும் குறை தீர்க்கும் கூட்டத்தை முற்றிலும் புறக்கணிப்போம். இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் முறையாக எந்தவொரு அதிகாரியும் கூறுவதில்லை’’ என்றார்.
விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், வனவிலங்குகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஆவேசமாகவும் பேசினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பெரும் பரபரப்பு நிலவியது. கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் சிம்சோன் துரை, கருணாகரன், சுரேஷ், பாஸ்கர், குணசேகரன், சாமுவேல் மற்றும் மூங்கிலடி, சிதம்பரபுரம், சிவபுரம், மஞ்சுவிளை, மேலப்பத்தை, திருக்குறுங்குடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் என திரளானோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
The post யானைகள், பன்றிகள் அட்டகாசம் அதிகரிப்பால் ஒன்றுமே மிஞ்சவில்லை வனவிலங்குகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? appeared first on Dinakaran.