யானைகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க எச்சரிக்கை விளக்குகள்

1 hour ago 1

*16 கிராமங்களில் பொருத்த வனத்துறை நடவடிக்கை

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், யானைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பயிர் சேதத்தை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் 16 கிராமங்களில் எச்சரிக்கை விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 சதுர கி.மீ ஆகும். இதில் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பு 504.33 சதுர கி.மீ. காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பு 686.40 சதுர கி.மீ ஆகும். ஓசூர் வனக்கோட்டமானது காவேரி, சின்னாறு, தென்பெண்ணை ஆறு மற்றும் தொட்டஹல்லா ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளாக அமைந்துள்ளது.

இவ்வனக்கோட்டத்தில் யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, முயல், மான்கள் என ஏராளமான உயிரினங்கள் வாழ்விடமாக உள்ளது. குறிப்பாக யானைகள் அதிகளவில் உள்ள வனக்கோட்டமாக ஓசூர் வனக்கோட்டம் உள்ளது.

தற்போது ஓசூர் வனக்கோட்டத்தில், 216 யானைகள் முகாமிட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா பகுதியில் இருந்து 125 யானைகள் இந்த வனக்கோட்டத்திற்குள் வந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் மட்டும் 45 யானைகளும், ஜவளகிரி வனச்சரகத்தில் 70 யானைகளும், அஞ்செட்டியில் 50 யானைகளும், ராயக்கோட்டையில் 15 யானைகளும், கிருஷ்ணகிரியில் 11 யானைகளும், உரிகத்தில் 25 யானைகளும் என மொத்தம் 216 யானைகள் உள்ளன.

இந்த யானைகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் பயிர் சேதங்களை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஓசூர் வனக்கோட்டட்தில் தற்போது உள்ள சுமார் 200-250 யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க ஜவளகிரி வனச்சரகம், புருவனப்பள்ளி கிராமப் பகுதிகளில் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

யானைகள் காப்புக்காட்டை விட்டு வெளியேறி கிராம பகுதிக்கு வரும்போது, வன அலுவலர்களிடம் உள்ள ஆப் மூலம் ஆன் செய்யும் போது, மேற்படி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு ஒளிரும். இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இவ்வாறு தற்போது முதற்கட்டமாக 16 கிராமங்களில் ஒளி விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், யானைகளின் நடமாட்டத்தை வனப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து, அனைத்து வனச்சரங்களிலும் யானைகள் நடமாட்டமுள்ள கிராமங்களில் “தடம்” குழுக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கூட்டம் நடத்தி, குறுஞ்செய்தி அனுப்புதல், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் செய்திகள் அனுப்புகள், ஒலிபெருக்கி மூலமும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்திகள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், தகவல் கட்டுப்பாட்டு மையம் மற்றும் டிரோன்கள் மூலமும் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, காப்புக்காடுகளை விட்டு வெளியில் வரும் யானைகள் மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பிடும் பணியில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நவீன தடுப்பு வேலிகளான இரும்பு வடகம்பி வேலி மற்றும் தொங்கும் வகையிலான சூரிய மின் வேலிகள் அமைத்தும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகள் நடமாட்டம் ஏதேனும் தென்பட்டால், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4255 135 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள், விவசாயிகள் தெரிவிக்கலாம். இதன் மூலம் உயிர்சேதம், பயிர் சேதத்தை தடுக்க முடியும். இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post யானைகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க எச்சரிக்கை விளக்குகள் appeared first on Dinakaran.

Read Entire Article