யானை நடமாட்டத்தை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள்யானை நடமாட்டத்தை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள்

2 weeks ago 4

தர்மபுரி, ஏப்.3: தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில், 2 இடங்களில் யானை நடமாட்டத்தை கண்காணிக்கவும், காட்டை விட்டு வெளியே வராமல் தடுக்கவும், ஏஐ தொழில்நுட்பத்திலான கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ கேமரா மூலமாக துல்லியமாக 1 கிலோ மீட்டர் தூரம் வரை தெரியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 38 சதவீத பரப்பு வனப்பகுதியாக உள்ளது. தமிழக அரசு ஓசூர் மற்றும் தர்மபுரி வனக்கோட்டங்களில் 504.33 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதியை, காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் என அறிவித்தது. கடந்த 2023ம் ஆண்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி வன மாவட்டத்தை உள்ளடக்கிய 2வது சரணாலயமாக, காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தை அரசு அமைத்தது. இது 686.405 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான காப்புக்காடுகளை கொண்டது. இந்த இரு சரணாலயங்களிலும் யானைகள் அதிகளவில் உள்ளன. தவிர சிறுத்தை, கரடி, நரி, காட்டெருமை, மான், கழுகு, மயில், மலைப்பாம்பு, கடம்பை மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

தற்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து, ஓசூர் வனக்கோட்டம் வழியாக பாலக்கோடு வனச்சரகத்திற்குள் யானைகள் இடம்பெயர்ந்துள்ளன. அங்கிருந்து ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்குள் யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது காட்டைவிட்டு வெளியே வருகின்றன. குறிப்பாக, பாலக்கோடு வனச்சரகத்தில் சொக்கன் கொட்டாய், ஈச்சப்பள்ளம், சந்திராபுரம், பாறைக்கொட்டாய், தொட்டப்பாவளி, செம்மஅள்ளிதாசன், ஒகேனக்கல் சாலைகள் உள்ளிட்ட இடங்களில், யானைகள் அடிக்கடி வெளியே வருகின்றன. யானை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர், இந்த யானைகளை கண்காணித்து, வனத்திற்குள் விரட்டி வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பென்னாகரம் வனப்பகுதியில் கடந்த 1ம்தேதி, யானையை சுட்டுக்கொன்ற கும்பல், தந்தங்களை எடுத்துக்கொண்டு எரித்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குபதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும், தந்தங்களை பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்ட வனத்துறை சார்பில், யானைகள் அதிகம் வந்து செல்லும் ஈச்சம்பள்ளம், சொக்கன்கொட்டாய் பகுதியில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய (செயற்கை நுண்ணறிவு) கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள், ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை, 360 டிகிரி கோணத்திலும் எந்த விலங்கு, மனித நடமாட்டத்தையும் தெளிவாக பெரிதாக காண்பிக்கும். இரவு நேரத்தில் நடமாட்டத்தை தெளிவாக கண்டறியப்பட்டு, படங்கள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினியில் பதிவாகும். இதற்கான கட்டுப்பாட்டு அறை, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இதற்காக பணியாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

முதல்கட்டமாக, 2 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்திலான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 5 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. பின்னர், படிப்படியாக முக்கிய இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்திலான கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டையாடுதலை தடுக்க வேட்டை தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

8 வனச்சரகத்திலும் இந்த குழுவினர், தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வனச்சரகர் தலைமையில் தனியாக வனத்துறையினர் அடங்கிய குழுவினரும், தனியாக இயங்கி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியே வருவதால், அதை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில், ஏஐ தொழில்நுட்பத்திலான கேமராகள் பொருத்தப்பட உள்ளது,’ என்றார்.

The post யானை நடமாட்டத்தை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள்யானை நடமாட்டத்தை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article