யாசகம் பெற்ற ₹10 ஆயிரத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

1 month ago 4

கடலூர், டிச. 10: யாசகம் பெற்ற ₹10 ஆயிரத்தை முதியவர் புயல் நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன் (75). இவர் தனது இளமை காலத்தில் சுமார் 30 வருடங்களாக மும்பையில் பொது சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் சுமார் 2,800 மரக்கன்றுகள் நட்டுள்ளார். அதன் பிறகு கடந்த 2010ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்து பல மாவட்டங்களில் யாசகம் பெற்று 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதி உதவி, கொரோனா பொதுநிவாரண நிதி, இலங்கை பிரச்சினை வந்தபோது இலங்கைக்கு நன்கொடை என பல ஆண்டுகளாக சேவை பணிகளை தொடர்ந்து வந்துள்ளார்.

இதில் கடந்த 2010ம் ஆண்டு முதல் தற்போது வரை ₹1 கோடியே 60 லட்சம் யாசகம் பெற்று பொதுமக்களுக்கு அளித்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வினால் யாசகம் பெறுவதை நிறுத்திவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூல் பாண்டியன் அறிவித்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டதை அறிந்த அவர் மீண்டும் மக்களிடம் யாசகம் பெற்று அதன் மூலம் கிடைத்த ₹10 ஆயிரத்தை புயல் நிவாரண நிதியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் நேற்று வழங்கினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post யாசகம் பெற்ற ₹10 ஆயிரத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர் appeared first on Dinakaran.

Read Entire Article