புதுடெல்லி: அரியானாவில் இருந்து பெறப்பட்ட தண்ணீர் நச்சுத்தன்மை வாய்ந்தது என்று யமுனை நீர் விவகாரத்தில் 14 பக்கங்கள் கொண்ட பதிலை தேர்தல் ஆணையத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜ ஆட்சி செய்து வரும் அரியானாவில் இருந்து யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டுள்ளது. எனினும், யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு மக்களை சென்றடைவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் இன்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையெனில் இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது’ என்றார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கெஜ்ரிவாலின் பேச்சு தொடர்பாக பாஜ புகார் செய்தது. அதனால், குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீசுக்கு பதிலளிக்க நேற்றிரவு வரை தலைமை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்தது. அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, டெல்லியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, ‘டெல்லியின் முன்னாள் முதல்வர் ஒருவர் அரியானாவின் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். தோற்று விடுவோம் என்ற அச்சத்தில், பேரழிவை ஏற்படுத்த கூடிய சிலர் (ஆம் ஆத்மியை குறிப்பிட்டு) நிலைகுலைந்து போயிருக்கின்றனர். அதனால், அப்படி பேசுகின்றனர். டெல்லியில் உள்ள மக்களிடமிருந்து அரியானா மக்கள் வேறுபட்டவர்களா? அரியானாவில் வசிப்பவர்களின் உறவினர்கள் டெல்லியில் வசிக்கவில்லையா? தங்களுடைய சொந்த மக்கள் குடிக்கும் நீரில் அரியானா மக்கள் விஷம் கலப்பார்களா? அரியானா அனுப்பும் தண்ணீரை டெல்லியில் உள்ள அனைவரும் பருகி வருகின்றனர். இந்த பிரதமரும் அந்த தண்ணீரையே குடிக்கிறார்’ என்றார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால், 14 பக்கங்கள் கொண்ட பதிலை அனுப்பியுள்ளார். அதில், சமீப காலங்களில் பாஜ ஆளும் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட பச்சைநீர் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் மாசுபட்டதாகவும், நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது. அத்தகைய “விஷ நீர்” மக்களால் உட்கொள்ள அனுமதிக்கப்பட்டால் கடுமையான உடல்நல கேடு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். நகரத்தில் குடிநீரின் தரம் காரணமாக “அவசர பொது சுகாதார நெருக்கடியை” மட்டுமே முன்னிலைப்படுத்த விரும்புவதாகவும், எந்த சட்டத்தையும் அல்லது மாதிரி நடத்தை விதிகளையும் மீறவில்லை. எனவே இந்த பிரச்னையை முடித்து கொள்ள வேண்டும். அரியானாவில் இருந்து பெறப்பட்ட நீரில் அம்மோனியா அளவு மிகவும் “மிக அதிகமாக” இருந்ததால், டெல்லியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் அதை பதப்படுத்தி மனித பயன்பாட்டுக்கு பாதுகாப்பான மற்றும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு ஏற்ற வகையில் குறைக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.
The post யமுனை நீர் விவகாரம்; அரியானாவில் இருந்து பெறப்பட்ட தண்ணீர் நச்சுத்தன்மை வாய்ந்தது: 14 பக்க பதிலை தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள கெஜ்ரிவால் appeared first on Dinakaran.