யமுனை நதி மாசுபாட்டிற்கு பாஜகவே காரணம்: டெல்லி முதல்-மந்திரி அதிஷி

3 weeks ago 4

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. வெள்ளை நிற பனிப்படலம் போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க.வும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இந்நிலையில், யமுனை நதியில் கடும் மாசு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்-மந்திரி அதிஷி அங்கு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிஷி கூறியதாவது,

பாஜக அரசின் மோசமான செயல்பாடே யமுனை நதி மாசு அடைந்ததற்கு காரணம்; அரியானா, உத்தரபிரதேசத்தில் உள்ள ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்காமல் யமுனை நதியில் விடுகின்றனர். இதனால் நீரில் அமோனியா அளவு அதிகமாக இருப்பதால் டெல்லியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யமுனையில் அதிகரித்து வரும் மாசு அளவு மற்றும் டெல்லியில் மோசமான காற்றின் தரம் ஆகிய இரண்டுக்கும் பாஜக தான் காரணம். பாஜக டெல்லியை வெறுக்கிறது என்பதும் டெல்லியை தாக்க அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தை பயன்படுத்துகிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

Read Entire Article