திருச்சி, செப்.30: திருச்சி மாநகரில் ரவுடிகள் மற்றும் சமூக விரோத கும்பல்களின் நடவடிக்கைளை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், 130 போலீசார் கொண்ட போலீஸ் படை, மோப்ப நாய் உதவியுடன் நேற்று 15 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில், 5 கிலோ கஞ்சா மற்றும் கணக்கில் வராத ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல், மாநகர பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் நபர்கள், செயின் பறிப்பு குற்றவாளிகள், வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் பூட்டை உடைத்து திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர், பிற மாநில லாட்டரி சீட்டு விற்பனை, சூதாட்டம் ஆகியவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர், சாலை விதிகளை மதிக்காமல் ஹெல்மெட் அணியாமல் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர்கள், சரக உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் குற்ற நடவடிக்கைகள் ஏற்படாதபடி பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருவதுடன், தொடர் கண்கானிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மாநகரம் முழுவதும் முக்கிய பகுதிகளை, 24 மணி நேரமும் கண்கானிக்கும் வகையில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் இரவு, பகல் பாராமல் கண்கானித்து வருகின்றனர். மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், மெயின்கார்டுகேட், ரயில் நிலையம் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மாநகர பகுதிகளை போலீசார் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.
ஒவ்வொரு போலீஸ் சரகத்துக்கும் உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் வங்கிகள், ஏடிஎம் மற்றும் நகைக்கடைகள் இருக்கும் பகுதிகளில் போலீசார் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேர ரோந்து பணியில் அதிகளவிலான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குற்ற வழக்குகளில் கைது செய்வோர் மீதான வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தருவதற்கான வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் கமிஷனர் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
கமிஷனர் தலைமையில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் முதல்வர் தனி முகவரி, போலீஸ் துறை இயக்குனர், மாவட்ட கலெக்டர் உட்பட மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேரடியாக வழங்கப்படும் புகார் மனுக்கள் மீது, அந்தந்த போலீஸ் சரக இன்ஸ்பெக்டர்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
தொடர் நடவடிக்கையாக ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் மாநகர பகுதியில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்து, சிறையில் அடைத்து மாநகர பகுதியின் குற்ற நடவடிக்கைள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்நிலையில், திருச்சி மாநகரில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக இனம் காணப்பட்ட 15க்கும் மேற்பட்ட முக்கிய பகுதிகள், மத்திய பஸ் நிலையம் பகுதிகளில் இருக்கும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் நேற்று அதிரடி சோதனை செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.
இதற்காக 130 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை முதல்கட்டமாகவும், மாலை 5 மணி முதல் இரவு எட்டு மணி வரை இரண்டாம் கட்டமாகவும் மாநகரின் முக்கிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் மோப்ப நாய் சகிதமாக போலீசார் வீடு வீடாக சென்று சல்லடை போட்டு சலித்ததில் 5 கிலோ கஞ்சா மற்றும் கணக்கில் வராத ₹ 1.70 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்த கணேசன், அவர் மனைவி பிரியா (42), குமாரவேல், தீபிகா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சியில் ஒரு மேன்சனில் நடத்திய சோதனையில் அங்கு தங்கியிருந்தவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.33 லட்சம் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்ததாவது, மாநகர பகுதிகளில் பொதுமக்களின் சகஜ வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநகர போலீஸ் கமிஷனரின் அதிரடி நடவடிக்கைகளால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்கள் கிலி அடைந்துள்ளனர்.
The post மோப்ப நாய் உதவியுடன் 15 இடங்களில் சோதனை 33 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது appeared first on Dinakaran.