
வாஷிங்டன்,
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை, நாடாளுமன்றம் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், வாஷிங்டனில் அரசு கட்டிடங்கள் அருகே உள்ள கூடாரங்கள், சாலை பள்ளங்கள் உள்ளிட்டவற்றை அகற்றவும் சுவர்களில் கிறுக்கப்பட்ட எழுத்துகள், ஓவியங்கள் ஆகியவற்றை அழிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நேற்று வெள்ளைமாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் இதுப்பற்றி பேசுகையில், "நாங்கள் இந்த நகரை (வாஷிங்டன்) சுத்தம் செய்து வருகிறோம். பிரதமர் நரேந்திரமோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் அமெரிக்கா வந்தபோது, அவர்கள் கூடாரங்களையோ, சாலை பள்ளங்களையோ, சுவர்களில் கிறுக்கப்பட்டதையோ பார்க்க நான் விரும்பவில்லை. எனவே அவர்களின் வருகையின்போது வெள்ளை மாளிகைக்கு அருகில் இருந்த கூடாரங்கள், சாலை பள்ளங்கள் மற்றும் சுவர்களில் கிறுக்கப்பட்டதை அவசர கதியில் அகற்ற உத்தரவிட்டேன்" எனக் கூறினார்.