மோடி-டிரம்ப் நல்ல நண்பர்கள் என்றால்... இந்தியர்களுக்கு கைவிலங்கு விவகாரத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய பிரியங்கா

2 hours ago 1

புதுடெல்லி,

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்ட டொனால்டு டிரம்ப், பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில், கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டடார்.

அமெரிக்கர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம், தேர்தல் பிரசார வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை முன்னிட்டு அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவின் எல்லை வழியே சட்டவிரோத வகையில், அந்நாட்டுக்குள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.

இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை சுமந்து கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் புறப்பட்டது.

அந்த விமானம், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1.55 மணியளவில் தரையிறங்கியது. இதில், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், மராட்டியம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா 3 பேர் மற்றும் சண்டிகாரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

நாடு கடத்தப்பட்டவர்கள் இந்தியா வந்தடைந்த பின்னர் கூறும்போது, தங்களுடைய கைகளும், கால்களும் விமான பயணத்தின்போது கட்டப்பட்டு இருந்தன என்றனர். அவர்கள் வந்திறங்கிய பின்னரே கைவிலங்குகள் அவிழ்க்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டாக கூறினர். இந்த விவகாரம் சர்ச்சையானது.

இதுபற்றி காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கூறும்போது, மோடியும், டிரம்பும் மிக நல்ல நண்பர்கள் என நிறைய விசயங்கள் கூறப்பட்டன. பின்னர் ஏன், இப்படி நடக்க பிரதமர் மோடி விட வேண்டும். நம்முடைய விமானத்தில் அவர்களை அழைத்து வர முடியாதா? என கேட்டுள்ளார்.

கை விலங்குகளை இட்டும், சங்கிலிகளால் கட்டியும் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டுமா? மக்களிடம் இந்த வழியிலா நடந்து கொள்வது? என்றும் கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எனினும், நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கை விலங்குகள் போடப்பட்டன என பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என்றும் கூறப்படுகிறது.

Read Entire Article