கோவை: மோடி, அமித்ஷா சொன்ன பரம ரகசியத்தை கேட்காததால் எடப்பாடி அனுபவித்து கொண்டிருக்கிறார். அதிமுகவில் இருந்து சிலர் என்னிடம் பேசி வருகிறார்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: நான் விரக்தியில் இருக்கிறேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறுகிறார். அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும், அதனை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தொண்டர்கள் விருப்பம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத அளவுக்கு பய உணர்வோடு இருக்கிறார்கள்.
எதற்கு அந்த பயம்? அதிமுக சக்திகள் ஒன்றிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது உண்மையான தத்துவம். ‘நாங்கள் தேஜ கூட்டணியில் இருந்ததால் தான் என்னையும், எடப்பாடி பழனிசாமியையும் அமித்ஷா அழைத்து பேசினார். அமித்ஷா கூறியதை அவர் ஏற்கவில்லை. அதன் பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மோடி, அமித்ஷா என்னிடம் வேறொரு ரகசியத்தை கூறி உள்ளனர். அது பரம ரகசியம். அது ரகசியமாகவே இருக்கட்டும். கட்சியின் உண்மையாd தொண்டர்கள் எங்கள் பின்னால்தான் இருக்கிறார்கள். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது ரகசியம். ஒரு சில ரகசியங்களை வெளியிட முடியாது.
அது அதிமுக இணைப்புக்கு தடையாக இருக்கும். அதிமுக இணைய வேண்டும் என்ற ஒத்த கருத்துடையவர்களுடன் நான் தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். அதிமுகவில் இருந்து சிலர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் ரகசியம் என நானும் கூறிக் கொண்டிருக்கிறேன். செங்கோட்டையன் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைக்கக் கூடியவர். எப்படியாவது சண்டை ஏற்படுத்தி செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டாம். இரு பெரும் தலைவர்கள் கட்டிக் காத்த கட்சி இணைய வேண்டும், தனிப்பட்ட நபரின் `ஈகோ’ வை உதறிவிட்டுவிட்டு கட்சி இணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
The post மோடி, அமித்ஷா சொன்ன பரம ரகசியம் கேட்காததால் அனுபவிக்கும் எடப்பாடி: கொளுத்தி போட்ட ஓ.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.