
முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் அவர்களின் வம்சத்தினருக்கு ஏற்படுகிற தோஷம் பித்ருதோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாவது இடம் என்பது பித்ருக்களை குறிக்கும் இடமாகும். ஜாதகத்தில் 5-ம் பாவகமான பூர்வ புண்ணிய ஸ்தானமும், 9-ம் பாவகமான பாக்ய ஸ்தானமும் முக்கியமான இடங்கள். இந்த ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் இருந்தால், அவர்களுக்குப் பித்ரு தோஷங்கள் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்தப் பித்ரு தோஷங்கள் பலவித தடைகளை உருவாக்கும்.
பித்ருக்களின் அருள் இருந்தால் மட்டுமே குலதெய்வம், இஷ்ட தெய்வங்களின் அருளும், அவர்களின் அருளால் நாம் நினைப்பது நிறைவேறுவது போன்ற நல்ல விஷயங்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. பித்ருதோஷம் ஏற்படுவதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. அதாவது, கருச்சிதைவு, பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது, முன்னோருக்கு சரிவர திதி கொடுக்காதது போன்றவற்றால் பித்ரு தோஷம் ஏற்படும் என கூறப்படுகிறது.
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ருதோஷம் உண்டு.
இப்படி பித்ருதோஷம் உள்ளவர்கள் அதற்கான பரிகாரம் மற்றும் தர்ப்பணங்களை செய்ய வேண்டியது அவசியம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை நாட்களில் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் அனைத்து தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை.
கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு. ராமேஸ்வரம், காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருநள்ளாறு, காசி போன்ற பரிகார தலங்களுக்குச் சென்று பிதுர்தோஷ பரிகாரங்களை முறையாக செய்து வர பிதுர் தோஷத்தில் இருந்த விடுபடலாம். சிரார்த்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.
பித்ருதோஷத்தால் துன்பப்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் இருப்பவர்கள் சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யலாம். இந்த அபிஷேகம் அமாவாசையன்று செய்வது சிறப்பு.