மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டுமானப் பணிகள்

1 day ago 4

அரியலூர் மே 22: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டிடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுதந்திரப் போரட்ட வீரர்கள், தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டு அதனை செயல்படுத்தி வருகிறார். அதன்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானிய கோரிக்கையின் போது செய்தித் துறை அமைச்சர் தமிழ்மொழி மீது தீராத பற்றுக்கொண்டு இந்தி திணிப்பினை எதிர்த்து போராடி முதன் முதலில் உயிர் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரால் அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டடத்தின் மேற்கூரைகள் அமைத்தல், மேடை அமைத்தல், நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் மற்றும் கழிவறை கட்டங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டட கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி பார்வையிட்டு கட்டுமானப் பொருட்களின் தரம், தற்போது வரை முடிக்கப்பட்டுள்ள பணிகளின் விவரம், எஞ்சியுள்ள பணிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்ததுடன், கட்டடத்தின் திட்ட வரைபடத்தினையும் பார்வையிட்டு, பணிகளை துரிதபடுத்தி, உரிய காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக அரியலூர் மாவட்டம், அயன் ஆத்தூர் கிராமத்தில் ஒரு முறை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி பட்டா வழங்குதல் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருவருள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டுமானப் பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article