மேல்மலையனூரில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அங்காளம்மன் கோயிலில் திரண்டு கைகளில் தீபம் ஏந்தி வழிபட்ட பக்தர்கள்

1 week ago 4

 

மேல்மலையனூர், ஜூன் 27: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கைகளில் தீபம் ஏந்தி அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஆனி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக அன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தங்க கவசம் அனிவிக்கப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு ஆனி மாத சிறப்பு அலங்காரமாக ராஜ்ய பிரதாயினி எனும் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை முதல் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் உற்சவர் அங்காளம்மனை பம்பை, மேளதாளங்கள் முழங்க பூசாரிகள் தோளில் சுமந்து வடக்கு வாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அமர வைத்து தாலாட்டு பாடல்களைப் பாடினர்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கைகளில் தீபம் ஏந்தி உயர்த்திபிடித்தபடி மனமுருகி அம்மனை வேண்டி வழிபட்டனர். இந்த காட்சி விண்ணுலகத்தில் இருந்து மண்ணுலகத்துக்கு வந்த விண்மீன்கள் போல காட்சியளித்தது. ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

The post மேல்மலையனூரில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அங்காளம்மன் கோயிலில் திரண்டு கைகளில் தீபம் ஏந்தி வழிபட்ட பக்தர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article