மேலூர்: மேலூர் அருகே நூற்றுகணக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்ட மீன் பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நேற்று நடைபெற்றது.மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் ஊராட்சியில் மாணிக்கம்பட்டியில் உள்ளது வாவூர் கண்மாய். விவசாய பணிகள் நிறைவடைந்ததால், தற்போது குறைந்த அளவே தண்ணீர் இருக்கும் கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதன்படி நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட சமத்துவ மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது.
இதற்காக கண்மாய் கரைப்பகுதியை சுற்றிலும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களும், கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசியதும், ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கினர். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்டவற்றின் உதவியுடன் மீன்களை பிடித்தனர். கெளுத்தி, கெண்டை, கட்லா, ரோகு, விரால், அயிரை போன்ற வகைகளில் சிறு மீன்கள் முதல் 2 கிலோ எடை வரையிலான மீன்கள் வரை அவர்களுக்கு கிடைத்தது.
இந்த மீன்களை விற்பனை செய்யாமல், வீடுகளில் சமைத்து, இறைவனுக்கு படைத்து, உண்ணுவதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த மீன்பிடி திருவிழா மூலம், விவசாயம் செழித்து, மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா: கிராம மக்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.