புதுடெல்லி,
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த இந்தியர்கள் பலர் 'சி-17' ரக ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நேற்று முன்தினம் மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரை வந்தடைந்தது.
அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகாரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் விமானத்தில் வந்தனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். இதனிடையே இந்தியர்கள் 104 பேரும் கைகளில் விலங்கு பூட்டப்பட்டும், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்க எல்லை காவல்படையின் தலைவர் மைக்கேல் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அந்த வீடியோவில் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இந்தியர்கள் விமானத்தில் ஏறும் காட்சிகள் உள்ளன.
அந்த வீடியோவுடன் பதிவு ஒன்றையும் மைக்கேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அதில், "சட்டவிரோதமாக குடியேறிய ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பிவிட்டோம். ராணுவ விமானத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நாடுகடத்தல் இதுவாகும்" என குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 104 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
குறிப்பாக கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டு ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதை நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
பிப்.,10 -12 தேதிகளில் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி பிப்.,12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்க உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியான பிறகு, மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும். ஜனாதிபதியான பிறகு அவரை சந்திக்கும் வெகு சில தலைவர்களில் மோடியும் ஒருவர் ஆவார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நாடு கடத்தப்படுபவர்களை, முறையாக கையாள வேண்டும் என அமெரிக்காவிடம் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
2012 ல் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட போது, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விவகாரத்தில், இந்தியா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் என கூற முடியாது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா அரசுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்னரும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை நடவடிக்கைகள் சற்று வேறுவிதமாக உள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்கா விளக்கம் அளித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கெனவே 104 இந்தியர்களை கை கால்களை கட்டி அமெரிக்கா அனுப்பி இருந்தநிலையில், வெளியேற்றப்படும் இந்தியர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.