மேலக்காவேரி பள்ளிவாசல் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்

1 month ago 5

 

கும்பகோணம், அக். 17: கும்பகோணம் மாநகர் மேலக்காவேரி பள்ளிவாசல் அருகே இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அப்புறப்படுத்தினர். கும்பகோணத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

அதன் பேரில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக அப்புறப்படுத்தி வருகிறது. அதில் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 44 குளம், குட்டைகளில் எள்ளுக்குட்டை, அனுமன்குளம் உள்ளிட்ட 19 இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நேற்று கும்பகோணம் மாநகர் மேலக்காவேரி பள்ளிவாசல் அருகே வடக்கு மற்றும் தெற்கு குட்டை நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருந்த கட்டிடங்களை மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர்.

முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதையொட்டி கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் மேற்பார்வையில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கும்பகோணம் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் முற்றிலும் அகற்றப்பட்டு நீர்நிலைகள் மீட்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மேலக்காவேரி பள்ளிவாசல் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article