
தெற்கு 24 பர்கானாஸ்,
மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர்பிரதிமா பகுதியில் தோலாகாட் கிராமத்தில் நள்ளிரவில் சமையல் செய்ய பயன்படும் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில், 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். வீட்டில் 2 சிலிண்டர்களில் ஒன்று திடீரென வெடித்து உள்ளது என போலீசார் தெரிவித்தனர். எனினும், பட்டாசு தயாரிக்கும்போது வெடிவிபத்து ஏற்பட்டது என முதலில் தகவல் வெளியானது.
ஆனால், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர் என மாநில சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், கடந்த பிப்ரவரி 4-ந்தேதி கல்யாணி என்ற பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பதர்பிரதிமா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர்களின் குடும்பத்தினருக்கு நாளை ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்படும். ஒரு வாரம் கழித்து மக்கள் அடுத்த செய்திக்கு சென்று விடுவார்கள். இதனை மறந்து விடுவார்கள். பூபதிநகர், எக்ரா, பட்ஜ் பட்ஜ், கல்யாணி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
நாட்டு வெடிகுண்டுகளின் குவியல் மீது மேற்கு வங்காளம் ஏன் அமர்ந்திருக்கிறது? என டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும் என அவர் பதிவிட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தில் உள்துறை மந்திரியாக உள்ள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.