
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவி (வயது 24) ஒருவர், கல்லூரி வளாகத்தில் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் ஒருவர் மற்றும் 2 மாணவர்களால் மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு ஆர்.ஜி. கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சட்ட கல்லூரியில் மாணவி பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
கல்லூரியின் முன்னாள் மாணவரான அந்நபருடன் சேர்ந்து மற்ற 2 பேரும் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இரவு 7.30 மணியில் இருந்து 10.50 மணி வரை 4 மணிநேரத்திற்கும் கூடுதலாக கல்லூரியில் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. அப்போது, அந்த மாணவியை ஆக்கி மட்டையால் அடித்தும், பலாத்கார சம்பவம் தொடர்பான வீடியோவை மொபைல் போனில் எடுத்தும், அதனை ஆன்லைனில் வெளியிட்டு விடுவோம் என 3 பேரும் அச்சுறுத்தியும் மற்றும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர் என அந்த மாணவி புகாரில் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அந்த குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்களின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றை தடய அறிவியல் ஆய்வுக்கு கொண்டு சென்றிருக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் மனோஜித் மிஷ்ரா என்பவர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராவார். அக்கட்சியின் மாணவரணியின் செயலாளராகவும் உள்ளார். அவருடன் அக்கட்சியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ஜைப் அகமது (வயது 19) மற்றும் மற்றொரு மாணவர் பிரமீத் முகர்ஜி (வயது 20) ஆகிய இருவரும் மாணவியை பலாத்காரம் செய்து காயப்படுத்தி உள்ளனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், கல்லூரியின் பாதுகாவலரான பினாகி பானர்ஜி (வயது 55) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பலாத்கார சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, இதே சட்ட கல்லூரி வளாகத்தில் ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. அந்த மாணவி தப்ப முயன்றபோது, ஆக்கி மட்டையில் அடித்துள்ளனர். நீதி வேண்டும் என புகாரில் அவர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்ச்சியாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க.வினர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சிலிகுரி நகரில் பா.ஜ.க.வின் மகளிரணியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இரவில், மஷால் மார்ச் என்ற பெயரில், நீதி கோரி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் நீதி வேண்டும் என வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தியபடியும், கோஷம் எழுப்பியபடியும் சென்றனர்.