மேற்கு வங்காளம்: அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் பயிற்சி டாக்டர்கள்

3 months ago 22

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பயிற்சி டாக்டர்கள் அறிவித்தனர். அதன்படி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை வளாகங்களுக்கு வெளியேயும் இன்று பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் அரசாங்கத்திற்கோ அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கோ எதிரானது அல்ல என்றும், மருத்துவ துறையில் நடக்கும் ஊழல்களை எதிர்த்து போராடி வருவதாகவும் பயிற்சி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக பயிற்சி டாக்டர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு மாபெரும் பேரணி நடத்த உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் பயிற்சி டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை(நாளை) நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Read Entire Article