மேம்பால பணிகள்: மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

2 months ago 13

மதுரை,

மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகர் சிவகங்கை சாலை- மேலமடை சந்திப்பில், மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பி.சி. பெருங்காயம் சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், மேலமடை சந்திப்பு நோக்கி வராமல் மாட்டுத்தாவணி அல்லது விரகனூர் சுற்றுச்சாலை வழியாக மாற்று வழித்தடத்தில் நகருக்குள் செல்லும் வகையில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சோதனை முறையிலும், 26-ந் தேதி முதல் தொடர்ந்தும் போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன்படி, பி.சி. பெருங்காயம் சந்திப்பில் இருந்து அனைத்து வாகனங்களும், மேலமடை வழியாக நகருக்குள் செல்லத்தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோல், கோமதிபுரம் 6-வது தெரு வழியாக வண்டியூர் மக்கள் மற்றும் உள்ளுர் மக்கள் கார்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல வேண்டும். மேலும் கோமதிபுரம் 6-வது தெருவை தாண்டி மேலமடை சிக்னலுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேலமடை, சுகுனா ஸ்டோர் வழியாக தெப்பக்குளம், விரகனூர் ஆற்றுப்படுகை ரோடு வழியாக செல்ல வேண்டும்.

பி.சி.பெருங்காயம் சந்திப்பிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேலமடை சந்திப்பு நோக்கி செல்லாமல் மாட்டுத்தாவணி அல்லது விரகனூர் சுற்றுச்சாலை வழியாக மாற்று வழித்தடத்தில் நகருக்குள் செல்ல வேண்டும். ஆவின் சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், மேலமடை சந்திப்பு வரை வந்து, இடதுபுறம் திரும்பி காய்கறி மார்க்கெட் வழியாக மாட்டுத்தாவணிக்கும், வலதுபுறம் திரும்பி சுகுணா ஸ்டோர், தெப்பக்குளம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலைக்கும் செல்ல வேண்டும். எனவே இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article