* சரக்குகளை கையாள புதுதிட்டம்
* கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
கடலூர் துறைமுகம் இந்தியாவின் பழம்பெரும் துறைமுகங்களில் ஒன்றாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வியாபார தலைநகரமாக கடலூர் துறைமுகம் விளங்கியது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல்தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தினர். சரக்கு போக்குவரத்துக்காகவும், அவர்கள் தங்கள் நாட்டுக்கு எளிதாக சென்று வரவும் கடலூர் துறைமுகத்தை பயன்படுத்தி வந்தனர்.
ஆசியாவில் உள்ள பழமையான துறைமுகங்களில், கடலூர் துறைமுகமும் ஒன்று. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கடலூர் துறைமுகத்திற்கு ரயில் போக்குவரத்தும் இருந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடிவுக்கு வந்த பின்னர் கடலூர் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து குறையத் தொடங்கியது. இதன் காரணமாக அந்த வழியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏற்கனவே ரயில் போக்குவரத்திற்காக அந்த பகுதியில் அமைக்கப்பட்ட ரயில்வே தண்டவாளங்கள் தற்போது தூர்ந்து போய் உள்ளன. ஒரு சில இடங்களில் அந்த தண்டவாளங்கள் வெளியே தெரிகின்றன.
இந்த தண்டவாளங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தால், புதிதாக தண்டவாளங்கள் அமைத்து ரயில் போக்குவரத்து தொடங்க ஏதுவாக இருக்கும். மேலும் துறைமுகத்துக்கு ரயில் போக்குவரத்து தொடங்கினால் அரசுக்கு வருமானமும் அதிகரிக்கும். மேலும் கடலூர் துறைமுகத்தில் இருந்து தற்போது வெளிமாநிலங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ரயில் போக்குவரத்து ஏற்படுத்தினால் மீன்கள் ஏற்றுமதிக்கும் எதுவாக இருக்கும். இதன்மூலம் மீனவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். கடலூர் துறைமுகத்தில் தினமும் அதிகாலை 3 மணியளவில் இருந்து மீன் விற்பனை தொடங்கும்.
இதில் சிறியவகை மீனான நெத்திலி முதல் பெரிய வகை மீனான சுறாமீன் வரை விற்கப்படும். மீன்களின் ஏற்றுமதி மற்றும் விற்பனை மூலம் ஒரு ஆண்டுக்கு சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. அந்நிய செலாவணியும் கணிசமான அளவுக்கு கிடைக்கிறது. பரவனாறு, உப்பனாறு ஆகியவை கடலில் கலக்கும் இடத்தில் 142 ஏக்கர் பரப்பளவில் கடலூர் துறைமுகம் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் தூரத்திலேயே இயற்கையாகவே 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் 2002க்கு பிறகு, இந்த துறைமுகத்திற்கு கப்பல் வருகை நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே கடந்த 2018ல் ஒன்றிய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் சாகர்மாலா திட்டத்தில், கடலூர் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்த 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் 2 கப்பல்கள் நிறுத்தும் தளங்கள் அமைக்கும் வகையில் முகத்துவாரப் பகுதியில் இருந்து பரவனாறு வரை 1,700 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம், தூர் வாரி ஆழப்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய துறைமுகம் திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கூடிய விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கடலூர் துறைமுகத்தில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக்கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள மத்திய துறைமுக பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளும் வகையில் பசுமை துறைமுகமாக இது அமைய உள்ளது. இதற்காக விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் துறைமுகத்திற்கு ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். அவ்வாறு ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்படும் பட்சத்தில் கடலூரிலிருந்து வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி செய்ய ஏதுவாக இருக்கும்.
இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். பசுமை துறைமுகம் என்பது பசுமைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலமும், குறைந்த மற்றும் பூஜ்ஜிய கார்பன் எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து ஊக்குவிக்கும் துறைமுகமாகும். இந்த துறைமுகங்கள் ஆற்றல்- தீவிர முனைய உபகரணங்கள், துறைமுகத்தில் கப்பல் செயல்பாடுகள் மற்றும் கப்பல் பதுங்கு குழி (எரிபொருள் நிரப்புதல்) போன்ற நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன் கடலூர் துறைமுகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிறுத்த வசதி ஏற்படும். இந்த கப்பல்கள் மூலம் உலக நாடுகளுக்கு கடலூரில் இருந்து அனைத்து வகை பொருட்களையும் ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் வழிவகை ஏற்படும். இதன்மூலம் பலகோடி மதிப்புள்ள அன்னிய செலாவணி ஈர்க்கப்படும். மேலும் உள்ளூர்வாசிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் கடலூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஏற்கனவே கடலூர் துறைமுகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சரக்குகள் சேமித்து வைக்கப்படும் கிடங்குகள் உள்ளன.
அவை தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இவற்றையும் சீரமைத்து சரக்குகளை கையாள நவீன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் சரக்கு போக்குவரத்து இருந்ததுபோல தற்போதும் சரக்கு போக்குவரத்து தொடங்கப்படும். ஆனால், தற்போது பலகோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஆங்கிலேயர்கள் காலத்தைவிட கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சி பலமடங்கு அதிகரிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். அதேநேரத்தில் கடலூர் சில்வர் பீச்சை நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறும் கடற்கரையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
* வளர்ச்சியடையும் 49 மீனவ கிராமங்கள்
கடலூர் மாவட்ட கடற்கரையின் நீளம் 57.5 கிலோ மீட்டர். இதில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் மீனவர்கள் நேரடியாகவும், மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலையும் செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, முடசல்ஓடை, சாமியார்பேட்டை, எம்.ஜி.ஆர்.திட்டு, அன்னங்கோயில் மற்றும் பேட்டோடை ஆகிய மீன்பிடி தளங்களிலிருந்து மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. பசுமை துறைமுகம் நடைமுறைக்கு வந்தால் மேற்கண்ட 49 மீனவ கிராமங்களும் பயன்பெறும். தற்போது கடலூர் சிப்காட் 3 பிரிவுகளாக அமைந்துள்ள நிலையில் சுமார் 50 பிரதான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் சிறுதொழில் கூடங்களும் அமைந்துள்ளன. ஏற்றுமதி- இறக்குமதி செயல்பாட்டுக்கு உகந்த சர்வதேச போக்குவரத்து கேந்திரமாக அமையவுள்ள புதிய பசுமை துறைமுகத்தின்மூலம் அனைத்து தரப்பு தொழிற்சாலை தொடர்பான செயல்பாட்டுக்கும் வலுசேர்த்து வளர்ச்சியடையும் நிலை உருவாகும்.
பசுமை துறைமுகத்தில் அமைக்கப்பட உள்ள வசதிகள்
* பிரேக் வாட்டர்கள்
* தளவமைப்பு (அழகுப்படுத்துதல்)
* சரக்குகள்-கடைகளின் குறுக்குவெட்டுகள்.
* ஏற்றுதல், போக்குவரத்து கையாளும் கருவிகள்.
* துறைமுகம் மற்றும் பெர்த் தளவமைப்பு.
* கப்பல் திரும்பும் பகுதி உட்பட அணுகுமுறை சேனல் தொடர்பான திட்டங்களுக்கு கரையோர வசதிகள்.
* கிடங்குகள், டிரக் பார்க்கிங், ரயில் சைடிங், பதுங்குகுழி அமைக்க தொட்டி பண்ணைகள்.
* எடை பாலங்கள், எரிபொருள் நிலையங்கள், பழுது- பராமரிப்பு கடைகள், உணவகங்கள்-கேண்டீன்கள்.
* முதலுதவி, பாதுகாப்பு, அவசர வாயில்கள், தீயணைப்பு போன்ற பல்வேறு வசதிகள்.
* மீன்களின் ஏற்றுமதி மற்றும் விற்பனை மூலம் ஒரு ஆண்டுக்கு சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. அந்நிய செலாவணியும் கணிசமான அளவுக்கு கிடைக்கிறது.
* தற்போது கடலூர் துறைமுகத்தில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக்கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
* ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்படும் பட்சத்தில் கடலூரிலிருந்து வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி செய்ய ஏதுவாக இருக்கும். இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.
The post மேம்படுத்தப்படும் ஆசியாவின் பழமையான வியாபார தலைநகரம்: நவீன கிடங்குகள், ரயில் போக்குவரத்துடன் கடலூரில் ‘பசுமை துறைமுகம்’; உள்ளூர்வாசிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.