சென்னை: ஜிஎஸ்டி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் நாளை (20-ம் தேதி) முதல் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணா சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.