மேட்டூர், ஏப்.17: மேட்டூர் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டூர் தாலுகாவில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று, களஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பிருந்தா தேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில், அலுவலர்கள் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. களப்பணிக்கு செல்லும் அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டம், சத்துணவு கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் தாலுகா அலுவலகம், தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள் பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்கின்றனர்.
நங்கவள்ளி பெரிய சோரகை நுகர்வோர் வாணிப கிடங்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நங்கவள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள், இயற்கை இடர்பாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியின் போது கொண்டு செல்லப்படும் உபகரணங்கள், தீ தடுப்பு கருவிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வீரக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், குழந்தைகளின் கல்வித்திறன், வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு சுகாதார முறையில் தயார் செய்யப்படுகிறது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, டிஆர்ஓ ரவிக்குமார், மேட்டூர் ஆர்டிஓ சுகுமார், தாசில்தார் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
The post மேட்டூர் தாலுகாவில் கலெக்டர் கள ஆய்வு appeared first on Dinakaran.