மேட்டூர் அணை திறப்பு: குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

1 day ago 5

சென்னை,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்குகிறது.. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்த சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்.

அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததையடுத்து மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள பைங்காநாடு, ராஜகோபாலபுரம், ராதாநரசிம்மபுரம் பகுதிகளில் குறுவை சாகுபடி பணி தீவிரமாக நடந்தது வருகிறது. தற்போது வரப்பு வெட்டுதல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஆழ்குழாய் கிணறு மூலம் நாற்று நடவு பணி செய்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் நடவு பணி நடைபெறுவதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் பெரும்பாலும் தொழிலாளர்கள் 100 நாள் வேலை செய்து வருவதால் ஆள் பற்றாகுறை ஏற்படுகிறது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் நாற்று பறிப்பு முதல் நடவு செய்வது வரை அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article