மேட்டுப்பாளையம், சிறுமுகை வனத்தில் இருந்து சாலைக்கு வரும் காட்டு யானைகளால் அச்சம்

1 hour ago 2

*போதிய வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லை என குற்றச்சாட்டு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டு மாடு, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்து வருவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால், அவ்வப்போது மனித – வன உயிரின மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊட்டி சாலை, கோத்தகிரி சாலை மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் படையெடுத்து வருகின்றன. குறிப்பாக, யானைகளின் வழித்தடங்களில் ஊட்டி சாலையில் உணவகங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள் என ஏராளமானவை புதிது, புதிதாக முளைத்துவிட்டன.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை அந்த உணவகங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள் முன்பு நிறுத்தி விடுகின்றனர். இதனால், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வேறு வழியின்றி 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த ஊட்டி, கோத்தகிரி சாலைகளில் உலா வருகின்றன. இப்பகுதிகளில் அடிக்கடி உலா வரும் பாகுபலி யானை இதுவரை மனிதர்கள் யாரையும் தாக்கியதும் இல்லை.

தாக்க முயற்சிக்கவும் இல்லை. ஆனால், தற்போது பாகுபலி யானை மட்டுமல்லாது மேலும் சில யானைகளும் உலா வருகின்றன.இதனால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வரும் ஊட்டி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் போது சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் அல்லது வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் இதுகுறித்து வனத்துறையினருக்கு போதிய தகவல் அளித்தாலும் உரிய நேரத்தில் அவர்கள் வருவதில்லை.

போதிய வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்படாததே இதற்கு காரணம் என வன ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து வனஆர்வலர்கள் கூறுகையில், “மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு எப்போதும் பரபரப்பான மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலைக்கு வந்த கஜா என்று மக்களால் அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை வாகன போக்குவரத்தை கண்காணித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

அதேபோல் நேற்று முன்தினம் வந்த மற்றொரு ஒற்றை காட்டு யானை, வாகனங்கள் அதிகம் ஊட்டி சாலையில் ஜாலியாக உலா சென்று திடீரென பிளிறல் சத்தத்துடன் வாகனங்களை துரத்தியது. இதனால், அப்பகுதியே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தாலும் உரிய நேரத்தில் வருவதில்லை. உதாரணத்திற்கு 30 வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 10 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலும் பகல் நேரத்தில் பணியில் இருக்கும் பலரை மீண்டும் கட்டாயப்படுத்தி இரவு பணியிலும் ஈடுபட வைக்கின்றனர். இதனால், வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகளை குறிப்பாக யானைகளை முறையாக கண்காணிக்க அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்த சாலைகள் மற்றும் கிராமங்களில் உலா வருகின்றன.

இதனால், அவ்வப்போது மனித-விலங்கு மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, போதிய அளவிலான வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வன ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும்’’ என்றனர். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில்,“போதிய வேட்டை தடுப்பு காவலர்களை நியமிப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post மேட்டுப்பாளையம், சிறுமுகை வனத்தில் இருந்து சாலைக்கு வரும் காட்டு யானைகளால் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article