*வியாபாரிகள் அச்சம்
குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூரில் இதமான காலநிலை காரணமாக பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. குறிப்பாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள தனியார் தோட்டங்களிலும், அரசு தோட்டக்கலை பண்னையில் உள்ள தோட்டங்களில் வைக்கப்பட்டுள்ள மரங்களில் பலாப்பழம் காய்த்துள்ளன.
இதனை ருசிப்பதற்காக சமவெளி பகுதிகளிலிருந்து காட்டுயானைகள் குன்னூரை நோக்கி படையெடுத்து வருகின்றன. மேலும் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தனித் தனி குழுக்களாக பிரிந்து மலைபாதையில் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று பகல் நேரத்தில் மரப்பாலம் பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டது.
இந்த யானை அவ்வப்போது பலாப்பழங்களை ருசிக்க சாலையை கடக்கிறது. குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் காட்டுயானையை சாலைக்கு வராமல், அந்த குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருப்பினும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் காட்டுயானையை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள கடைகளில் பலா பழங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் சாலையோர கடைகளில் பலாப்பழத்தை ருசிக்க வரும் காட்டு யானை appeared first on Dinakaran.