மேடையில் பகிரங்கமா கேள்விகேட்ட நிர்வாகியை புரட்டி எடுத்த மாஜி மந்திரியின் ஆட்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 weeks ago 3

‘‘மேடையில கேள்வி கேட்ட மூத்த நிர்வாகியை பின்பக்கமாக தள்ளிட்டு போய், இலை பார்ட்டி மாஜி மந்திரி ஆளுங்க சக்கையா பிழிஞ்சி எடுத்துட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் இலை கட்சியில் புகைந்துகொண்டிருந்த உட்கட்சி பூசல் பகிரங்கமா அம்பலத்துக்கு வந்திருப்பதுதான் இப்ப அந்த மாவட்டத்தின் ஹாட் டாப்பிக். சமீபத்தில் இலை கட்சி சார்பில் கிரிவல ஊருல ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனா, கிழக்கு மாவட்ட தலைமையில் இருக்கிற மாஜி மந்திரி, அது சம்பந்தமா கட்சி நிர்வாகிகளுக்கு முறையா தகவல் சொல்லவில்லையாம்.. அதனால வேதனைப்பட்ட மாவட்ட பேரவை பொறுப்புல இருக்கிற வானொலியை புனைப்பெயரா வச்சிருக்கிற நிர்வாகி ஒருத்தரு, ஆர்ப்பாட்ட மேடையில் கேள்வி கேட்டிருக்காரு.. அதனால ஆத்திரமடைஞ்ச மாஜி மந்திரி கண் அசைக்க, அவரது ஆதரவாளருங்க, கேள்வி கேட்ட நிர்வாகிய மேடைக்கு பின் பக்கமா தள்ளிட்டுபோயி, சக்கையா பிழிஞ்சி எடுத்துட்டாங்களாம்..

அதோட, செல்போன் ஆடியோ ரிலீஸ் விவகாரத்துல ஆத்திரத்துல இருந்த பெண் நிர்வாகி ஒருத்தரு, நேரடியாக களமிறங்கி பேரவை நிர்வாகியின் கன்னத்துல அறைந்ததுதான் ைஹலைட்டாம்.. உள்காயம் பலமா ஏற்பட்டதால, ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்காரு நிர்வாகி. நாப்பத்தி ரெண்டு வருஷ கட்சிக்காரனுக்கு ஏற்பட்ட நிலைய பாத்திங்களானு போறவங்க, வர்றவங்க கிட்டயெல்லாம் கண்ணீர் விடுறாராம்.. அத கேள்விபட்ட விவசாயத்தை பெயரா கொண்ட மாஜி மந்திரியும், திருப்பதி சாமி பெயரை கொண்ட மாஜி மாவட்டமும் நேரில் போய் ஆறுதல் சொல்லியிருக்காங்க.. கிழக்கு மாவட்ட மாஜி பதவியை காலி செய்துடறோம்னு சபதம் போட்டிருக்கங்களாம்.. ஏற்கனவே பூ கட்சிக்கிட்ட இலையை அடகு வச்சி சிக்கலில் சிக்கியிருக்கும் சேலத்துக்காரருக்கு, உட்கட்சி பிரச்னை பத்தியெல்லாம் யோசிக்ககூட நேரமில்லையாம்..

கட்சிக்காரன் உதைபட்டு ஆஸ்பத்திரியில் படுத்துகிடக்குறத பத்தியா அவரு கவலைப்படபோறாருனு இலைக்கட்சிக்காரங்க புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலராத கட்சியுடன் கூட்டணி என அறிவித்து இனி வரும் காலங்களில் அரசியல் வேலையே இல்லாமல் செய்துவிட்டது தலைமை என இலைக்கட்சி நிர்வாகிகள் புலம்புறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியுடன் இலைக்கட்சி கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், புரம் என முடியும் கடலோர மாவட்டத்திலுள்ள இலைக்கட்சியின் நிர்வாகிகளும், கட்சியினரும் ரொம்பவே அப்ெசட் மோடிற்கு சென்று விட்டார்களாம்.. கூட்டணி அறிவிக்கப்பட்டது முதல் பெரும்பாலான இலைக்கட்சி நிர்வாகிகள் வெளியில் தலைகாட்டுவதையே தவிர்த்து வருகிறார்களாம்.. இந்த மாவட்டத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பகுதியாக உள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளும், நாடாளுமன்ற தொகுதியும் திமுக கூட்டணியின் கையில்தான் இருக்கு..

ஏற்கனவே இங்கு தங்களுக்கு வேலை இல்லாமல் போன நிலையில், மீண்டும் மலராத கட்சியுடன் கூட்டணி வைத்து இனி வரும்காலத்திலும் தங்களுக்கு அரசியலில் வேலையே இல்லாமல் செய்யும் நிலையை தலைமை உருவாக்கி தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டதே என புலம்பி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதிய தலைவருக்கு தேசிய மகளிர் தலைவி கொடுத்த வரவேற்பால கொதிப்படைந்த மான்செஸ்டர் மவுண்டன் ஆதரவாளர்கள் ரிவென்ச் எடுக்க காத்திருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மாநில புதிய தலைவர் கடந்த வாரம் மான்செஸ்டர் மாநகருக்கு விசிட் அடித்தாராம்.. பதவியேற்ற பிறகு முதன்முதலாக வந்ததால் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டதாம்.. புதிய தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஆட்டம், பாட்டத்தோடு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்த பதவி இழந்த தலைவரின் ஆதரவாளர்கள் செம டென்சன் ஆகிட்டாங்களாம்..

தலைவர் பதவி இழந்த மவுண்டனின் சொந்த ஊர் வேறாக இருந்தாலும் மான்செஸ்டர் மாநகரில் தற்காலிகமாக குடியேறி தனது ஆதரவாளர்களை சந்தித்தும் ஆலோசித்தும் வந்தார். மவுண்டனுக்கும், மான்செஸ்டரை பூர்வீகமாக கொண்ட மலராத கட்சியோட தேசிய பதவி வகிக்கும் தலைவியும் அடிக்கடி அக்கா, தம்பி பாசத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தினாலும் உள்ளுக்குள் எலியும், பூனையுமாகத்தான் இருந்தாங்க.. மவுண்டன் மான்செஸ்டருக்கு வருவது தெரிந்தால் தேசிய தலைவி சொந்த ஊரில் இருப்பதை திட்டமிட்டு தவிர்த்து வந்தார். அப்படியே இருந்தாலும் தனது தொகுதி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிஸியாக இருப்பதுபோல காட்டிக்கொள்வார்.. மவுண்டனின் சாட்டையடி நாடக விழாவிற்கு அக்கா வருவார் என்று மவுண்டனும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தாங்க.. ஆனா சாட்டையடி விழாவில் கலந்துகொள்ளாம திட்டமிட்டு புறக்கணிச்சு அதிர்ச்சியை கொடுத்தாங்க..

மவுண்டனை தலைவர் பதவியில் இருந்து தூக்கியே ஆகனும்னு தீவிரமா இருந்து காய் நகர்த்திய நபர்களில் தேசிய தலைவியும் ஒருவராம்.. இது மவுண்டனுக்கும் நல்லா தெரியும். இந்த சூழலில் மலராத கட்சியின் புதிய தலைவர் மான்செஸ்டருக்கு வந்ததை ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து அமர்க்களம் செய்து, தனது ஆதரவாளர்களோடு புதிய தலைவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தி இருக்காங்க.. இது மவுண்டனின் ஆதரவாளர்களை கொதிப்படைய செய்திருக்கு.. நம்ம தலைவர் வரும்போது மட்டும் ஏதாவது காரணத்தை சொல்லி புறக்கணிச்சிட்டு இருந்தவங்க இப்ப மட்டும் ஊர் முழுவதும் போஸ்டர் அடிச்சி, இப்படி அமர்க்களம் பண்றாங்களேன்னு கொதி நிலைக்கு போனதோடு இல்லாம மகளிர் தலைவியின் வரவேற்பு நிகழ்வுகளை மினிட் டூ மினிட் மவுண்டனுக்கு அனுப்பி வைத்தார்களாம்.. எலக்சன் வரட்டும். அப்போது ரிவென்ச் எடுக்கலாம்னு மவுண்டனின் ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post மேடையில் பகிரங்கமா கேள்விகேட்ட நிர்வாகியை புரட்டி எடுத்த மாஜி மந்திரியின் ஆட்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article