
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் முன்னணி ஆல்ரவுண்டர்களான பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) மற்றும் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) ஆகியோர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். இவர்கள் கடந்த சீசனிலும் தங்களது அணிகளுக்காக குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கவில்லை.
இந்நிலையில் மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன் போன்ற வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் தங்களுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியாவுக்கு வரவில்லை என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டனிடம் வெற்றிக்கான பசி நீங்கிவிட்டது போல் உணர்கிறேன். அவர்கள் இங்கே (இந்தியா) விடுமுறையை கழிக்க வருகிறார்கள். அவர்கள் வருகிறார்கள், வேடிக்கை பார்க்கிறார்கள், வெளியேறுகிறார்கள். அணியின் வெற்றிக்காக போராடுவதற்கான விருப்பம் அவர்களிடம் தெரியவில்லை. தங்களுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை" என்று கூறினார்.