பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய லக்னோ: கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது என்ன..?

8 hours ago 1

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களம் கண்ட லக்னோ அணி இந்த தோல்வியின் மூலம் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில் இந்த தோல்விக்குப்பின் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில், "நிச்சயமாக இது எங்கள் சிறந்த சீசன்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் போட்டிக்குள் வரும்போது அணியில் நிறைய இடைவெளிகளை நாங்கள் நிரப்ப வேண்டியிருந்தது. ஒரு அணியாக அதைப் பற்றி பேசக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் அந்த இடைவெளிகளை நிரப்புவது கடினமாகிவிட்டது. ஏலத்தில் நாங்கள் திட்டமிட்ட பவுலர்களுடன் விளையாடியிருந்தால் கதை வேறு மாதிரி இருந்திருக்கும்.

சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் செல்லும். சில நேரங்களில் செல்லாது. எனவே நாங்கள் இதுவரை விளையாடிய விதத்தில் பெருமையை எடுத்துக் கொள்கிறோம். மேலும் இந்த வருடம் கிடைத்த நேர்மறையான விஷயங்களைப் பார்க்கிறோம். எங்களிடம் வலுவான பேட்டிங் இருக்கிறது. சொல்லப்போனால் சில நேரங்களில் பவுலர்களும் சிறப்பாக பவுலிங் செய்தனர். அதை வைத்து நாங்கள் சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சி செய்தோம்.

இந்த ஆட்டத்தை பொறுத்த வரை நாங்கள் 10 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். சீசனின் முதல் பாதியில் நாங்கள் மிகவும் நன்றாக விளையாடினோம். ஆனால் இரண்டாவது பாதி கடினமாக மாறியது. பந்துவீச்சாளர் ரதி நன்றாக விளையாடியுள்ளார். இது அவருக்கு முதல் சீசன். ஆனால் முதல் வருடத்திலேயே அவர் பவுலிங் செய்த விதத்தைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர் எங்களுடைய நேர்மறையான விஷயங்களில் ஒருவர். ஆனால் நீங்கள் உங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article