
புதுடெல்லி,
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இந்த சீசனில் ஜொலிக்கவில்லை. 7 ஆட்டத்தில் 48 ரன்கள் மட்டுமே எடுத்தார். கையில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலகினார்.
இந்நிலையில் மேக்ஸ்வெல் ஏன் சரியாக விளையாடவில்லை? என்பது குறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார். இது பஞ்சாப் அணியின் உரிமையாளரும், இந்தி நடிகையுமான பிரீத்தி ஜிந்தாவை கோபமடைய செய்துள்ளது.
அந்த பதிவில், "மேடம்... மேக்ஸ்வெல் உங்கள் அணிக்காக மோசமாக விளையாடுகிறார். அதற்கு அவர் உங்களை திருமணம் செய்து கொள்ளாததுதான் காரணமா?. நான் சொல்வது சரிதானே" என்று பதிவிட்டிருந்தார் .
இதற்கு பதிலடி கொடுத்த பிரீத்தி ஜிந்தா, "இதே கேள்வியை ஆண் உரிமையாளர்கள் உள்ள மற்ற அணிகளிடம் கேட்பீர்களா? அல்லது பெண்களுக்கு மட்டும்தான் இந்த பாகுபாடா? நான் கிரிக்கெட்டில் நுழையும் வரை கார்ப்பரேட் நிறுவனத்தில் தாக்குப்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியாது. இந்த கேள்வியை நீங்கள் நகைச்சுவைக்காக கேட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். என்றாலும் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள இந்த கேள்வியை உற்றுநோக்குங்கள்.
ஏனெனில் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டால், அது அழகாக இல்லை! என்பது தெரியும். கடந்த 18 ஆண்டுகளாக கடினமாக உழைத்து மதிப்பு, மரியாதையை சம்பாதித்துள்ளேன். எனவே தயவு செய்து எனக்கு தகுதியான மரியாதை கொடுங்கள். பாலின பாகுபாட்டுடன் பேசுவதை நிறுத்துங்கள். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.