
முல்லாப்பூர்,
18-வது ஐ.பி.எல். தொடரில் முல்லாப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் நேஹல் வதேரா 62 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் நேஹல் வதேரா உடன் ஜோடி சேர்ந்து விளையாடிய மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியை வெற்றி பெற வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் அவர் 30 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் 75 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் ஹேலி வால் நட்சத்திரம் போல மேக்ஸ்வெல் ஐ.பி.எல். தொடரில் அபூர்வமாகவே அசத்துவதாக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஹேலி வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி வருகிறது. அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியிலிருந்து தெரியும். அதைப் போலவே, கிளென் மேக்ஸ்வெல் 75 ஆட்டங்களில் ஒரு நல்ல ஆட்டத்தை விளையாடுகிறார். இது கடைசியாக 1986 -ல் காணப்பட்டது. அது அடுத்தாக 2061-ல் காணப்படும். பேட்டிங்கில் மேக்ஸ்வெல்லுக்கும் இதே நிலைதான். கிளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட்டின் ஹேலி வால் நட்சத்திரம்" என்று கூறினார்.