
ஐதராபாத்,
இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தெலுங்கானா மாநில அரசு நடத்துகிறது.இதையொட்டி இந்த போட்டியை பிரபலப்படுத்தும் முன்னோட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:-
72-வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உள்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும். இதற்கான செலவை தெலுங்கானா சுற்றுலாத்துறையும், மிஸ் வேர்ல்ட் நிறுவனமும் சமமாக ஏற்றுக்கொள்ளும். உலக அழகிப் போட்டி நடத்துவது மாநிலத்தின் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. உண்மையில் இந்த போட்டியின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும்.
உலக அழகிப் போட்டியை தெலுங்கானாவில் நடத்துவது வெறும் கவுரவப் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் பெண்களைக் கொண்டாட இது ஒரு வாய்ப்பு. அவர்களின் மன உறுதியை அங்கீகரிக்க இது ஒரு தெளிவான அழைப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் ரூ.71 ஆயிரம் கோடி நிதி நெருக்கடியில் தெலுங்கானா மாநிலம் தத்தளிக்கும் போது ரூ.200 கோடி செலுத்தி, ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடத்த வேண்டுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது.